2012-06-12 16:15:09

விவிலியத் தேடல் திருப்பாடல் 126


RealAudioMP3 RealAudioMP3 அண்மையில் பள்ளி இறுதித் தேர்வுகளை எழுதி முடித்திருந்த நம் மாணவச் செல்வங்களுக்குத் தேர்வு முடிவுகள் வந்தன. அந்த முடிவுகளைக் காணக் காத்திருந்த இளையோரைக் கற்பனை செய்து பார்ப்போம். தாங்கள் வெற்றி அடைந்துவிட்டோம் என்பதை அறிந்ததும் அவர்கள் துள்ளி குதித்திருப்பார்கள். மகிழ்வில் கூச்சலிட்டிருப்பார்கள். அதேபோல், மதிப்பெண்கள் வந்த நாளன்றும் கூச்சலும் கொண்டாட்டமும் இருந்திருக்கும். அதிலும் சிறப்பாக, ஒரு சிலர் தாங்கள் தேர்வுகளைச் சரிவர எழுதவில்லை என்று எண்ணியிருந்த வேளையில், அவர்கள் எதிர்பார்க்காத அளவு கூடுதல் மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அவர்கள் மகிழ்வு எல்லைகடந்து போயிருக்கும். "இதை என்னால் நம்பவே முடியவில்லை", "இது கனவு போல் உள்ளது" என்ற வார்த்தைகள் சொல்லப்பட்டிருக்கும்.

வாழ்வில் எதிர்பாராத மகிழ்வுச் செய்திகள் நம்மை அடையும்போது, அவற்றை நம்ப மனம் மறுக்கிறது. நாம் காண்பது கனவா என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த அனுபவத்தை மனதில் இருத்தி, இன்றைய விவிலியத் தேடலைத் துவக்குவோம். எருசலேம் கோவிலை நோக்கிச் செல்லும் திருப்பயணிகள் பாடும் பாடல்கள் என்று நாம் கடந்த சில வாரங்களாகச் சிந்தித்து வருகிறோம். திருப்பாடல் 120ல் ஆரம்பித்த அந்த வரிசையில், இன்று நாம் சிந்திக்கும் திருப்பாடல் 126 ஏழாவது பாடல். எதிர்பாராத மகிழ்வை நம்பமுடியாமல் திணறும் ஒரு மனநிலையை இந்தப் பாடலின் முதல் வரிகள் நமக்குச் சொல்கின்றன:
திருப்பாடல் 126 1-2
சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது.

இஸ்ரயேல் மக்களை இவ்வளவு தூரம் மகிழ்வில் ஆழ்த்தியது புறவினத்தைச் சேர்ந்த ஒரு பேரரசன். பழைய ஏற்பாட்டு காலத்தில், கி.மு. 538 முதல் 530 வரை புகழ்பெற்ற மன்னராக இருந்தவர் பாரசீகப் பேரரசர் சைரஸ். இவர் போரில் அடைந்த வெற்றிகள் பல. அன்றைய காலக் கட்டத்தில் உலகிலேயே மிகப்பெரிய அரசை பேரரசர் சைரஸ் ஆண்டு வந்தார் என்று சொல்லப்படுகிறது.
இவரிடம் தனித்துவமான குணம் ஒன்று காணப்பட்டது. பொதுவாக, எந்த ஓர் அரசனும் மற்றொரு நாட்டின் மீது வெற்றி கொண்டால், அந்த நாட்டு மக்களை அடிமைகளைப் போல் நடத்துவார். ஆனால், மன்னன் சைரஸ் வித்தியாசமாகச் செயல்பட்டார். தான் வென்ற நாடுகளில் வாழ்ந்த மக்களை அடிமைகளாகக் கொடுமைப்படுத்துவதற்குப் பதில், அவர்களுக்கு மதிப்பளித்து, அவர்கள் அதுவரைக் கடைபிடித்த பழக்க வழக்கங்களைத் தொடர அனுமதி அளித்தார். இவர் பாபிலோனிய நாட்டைக் கைப்பற்றியதும், அங்கு அடிமைகளாய் வாழ்ந்துவந்த இஸ்ரயேல் மக்கள் அவர்களுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பிச்செல்ல அனுமதி அளித்தார். அது மட்டுமல்ல, பாபிலோனியர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட எருசலேம் கோவிலை இஸ்ரயேல் மக்கள் மீண்டும் கட்டியெழுப்ப பேரரசர் சைரஸ் கட்டளையிட்டார். பேரரசர் சைரஸின் நற்பண்புகளை இறைவாக்கினர் எசாயா இவ்விதம் கூறியுள்ளார்:
எசாயா 45 - 1,4,5,13
சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்: பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார். அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்: ... அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே: என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும் நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்: நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன். நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன்.
வெற்றிபெறுமாறு நான் சைரசை எழுப்பினேன்: அவன் செல்லும் அனைத்து வழிகளையும் சீர்படுத்தினேன்: அவன் என் நகரைக் கட்டியெழுப்புவான்: நாடு கடத்தப்பட்ட என் மக்களை ஈட்டுப் பொருளோ, அன்பளிப்போ பெறாது திருப்பி அனுப்புவான் என்கிறார் படைகளின் ஆண்டவர்.

புறவினத்தைச் சேர்ந்த ஒரு பேரரசன் அடிமைத் தளையிலிருந்து தங்களுக்கு விடுதலைத் தந்தது மட்டுமல்லாமல், எருசலேம் கோவிலை மீண்டும் கட்டியெழுப்புங்கள் என்று கட்டளையிட்டதைக் கேட்ட இஸ்ரயேல் மக்கள் சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். என்று திருப்பாடல் 126ன் ஆரம்ப வரியில் பாடியுள்ளனர்.
எருசலேம் கோவில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டபோது, புறவினத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்ரயேல் மக்களை எள்ளி நகையாடினர். "உங்கள் கடவுள் எங்கே?" என்று கேலியும், கேள்வியுமாய் அவர்களை வதைத்தனர். இப்போதோ, சைரஸ் மன்னன் வழியாக மீண்டும் எருசலேம் கோவிலைக் கட்டியெழுப்பும் முயற்சிகள் துவங்கியபோது, அதே புறவினத்தார் ஆச்சரியம் அடைகின்றனர். இந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் திருப்பாடல் 126ன் வரிகள் இதோ:
தி.பா.126 2-3
ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார் என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.

இத்திருப்பாடலின் முதல் மூன்று சொற்றொடர்களில் மகிழ்வும், ஆரவாரமும் ஒலித்தன. அடுத்த மூன்று சொற்றொடர்களில் மாறுபட்ட உணர்வுகள் வெளிப்படுகின்றன. சைரஸ் மன்னன் மனம் வைத்ததால், இஸ்ரயேல் மக்களில் பலர் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளனர். ஆயினும், இன்னும் பலர் அடிமைகளாக துன்புற்றனர். ஒருவேளை, வேறு நாடுகளிலும் அவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டிருக்கலாம். சொந்தநாடு திரும்ப முடியாமல் வேற்று நாடுகளில் அடிமைகளாகத் தவிக்கும் தங்கள் இனத்தவரை எண்ணி, இத்திருப்பாடலின் இறுதி மூன்று சொற்றொடர்கள் ஏக்கம் நிறைந்த செபமாக அதே நேரம் நம்பிக்கையை வெளிப்படுத்தும் செபமாக ஒலிக்கின்றன. தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் இன்றும் தவிக்கும் கோடான கோடி உள்ளங்களை இப்போது நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். திருப்பாடல் ஆசிரியர் இறைவனை நோக்கி மன்றாடும் இந்த வரிகளின் வழியே இந்த உள்ளங்கள் அனைவருக்காகவும் நாமும் இணைந்து நம் செபங்களை எழுப்புவோம்:
திருப்பாடல் 126 4-6
ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். விதை எடுத்துச் செல்லும்போது-செல்லும்போது-அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது-வரும்போது-அக்களிப்போடு வருவார்கள்.

இத்திருப்பாடலின் இறுதி இரு சொற்றொடர்களில் கூறப்பட்டுள்ள ஓர் உருவகம் நமது கவனத்தை ஈர்க்கிறது. வேளாண்மையை ஒட்டிய இந்த உருவகத்தின் ஆழத்தை நாமும் உணர்வது பயனளிக்கும். "கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வர். அழுகையோடு விதை எடுத்துச் செல்பவர்கள், அக்களிப்போடு கதிர்களைச் சுமந்து வருவர்."
திருப்பாடல் 126ன் இந்த வரிகளை வைத்து Del Tarr என்ற நற்செய்திப் பணியாளர் சொல்லும் ஓர் உவமை ஆழமானது. விதைக்கச் செல்பவர் ஏன் கண்ணீரோடு விதைக்கச் செல்கிறார் என்பதை அழகாக விளக்கும் கதை இது. () Del Tarr ஆப்ரிக்காவின் சகாரா பாலைநிலத்துக்கு அருகே தன் பணிகளைச் செய்தவர். அப்பகுதியில் வருடத்தில் நான்கு மாதங்களே மழை பெய்யும். மற்ற எட்டு மாதங்கள் வறட்சிதான். ஆண்டு முழுவதற்கும் தேவையான உணவை அந்த நான்கு மாதங்கள் விதைத்து, வளர்த்து, அறுவடை செய்து, சேமித்து வைக்க வேண்டும்.
அறுவடை முடிந்த முதல் இரு மாதங்களில் அப்பகுதி மக்கள் ஒரு நாளுக்கு இருமுறை நன்கு உண்பார்கள். தொடரும் இரு மாதங்களில் ஒரு முறை உணவு. அதைத் தொடரும் இரு மாதங்கள் இன்னும் குறைவான உணவு. மழை காலத்திற்கு முன் உள்ள இரு மாதங்கள் எல்லா வீடுகளிலும் பசியும் பட்டினியும் வெளிப்படையாகத் தெரியும். அந்த இரு மாதங்களில் இரவில் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் பசியால் அழுவதைக் கேட்கமுடியும் என்று Del Tarr கூறுகிறார்.
இந்த வறண்ட மாதங்களில் ஒரு நாள், ஒரு சிறுவன் வீட்டுக்கு ஓடி வந்தான். அப்பாவிடம், "அப்பா, அப்பா, நான் ஒரு பையில் தானியங்களைப் பார்த்தேன்" என்று மகிழ்வுடன் கத்தினான். எங்கே என்று கேட்ட தந்தையிடம், “நாம் ஆடுகளைக் கட்டி வைத்திருக்கும் அந்தக் குடிசையில் ஒரு கம்பத்தில் அந்தப் பை தொங்கிக் கொண்டிருக்கிறது. சீக்கிரம் அதை அம்மாவிடம் கொடுங்கள். இன்று நாம் நன்கு சாப்பிடலாம். ஒவ்வொரு நாளும் பசியோடு படுக்கப்போவதால், இரவு விழித்துக் கொள்ளும் நமது வயிறு இன்றாவது நன்கு உறங்கும்.” என்று சிறுவன் தன் மகிழ்ச்சியைக் கொட்டித் தீர்த்தான். தந்தை அவனைப் பார்த்தார். அவர் கண்களில் லேசாகக் கண்ணீர். "இல்லை மகனே... அந்தப் பையில் இருப்பது அடுத்த விளைச்சலுக்கு நாம் சேமித்து வைத்திருக்கும் விதைகள். அதை நாம் உண்ண முடியாது." என்று சொன்னார். மகனுக்கு விளங்கவில்லை. அவன் அழுதான்.
தொடர்ந்த சில நாட்கள் மகனுடைய ஏக்கம் நிறைந்த, ஏமாற்றம் நிறைந்த கண்களைப் பார்க்கும்போதெல்லாம், தந்தைக்குக் கண்ணீர் வந்தது. இருந்தாலும், அதைக் கட்டுப்படுத்தினார். மழைக்காலம் துவங்கியது. இறைவன் தருவார் என்ற நம்பிக்கையுடன் விதைகள் அடங்கிய அந்தப் பையை எடுத்துக்கொண்டு நிலத்திற்குப் புறப்பட்டார் தந்தை. வீட்டுவாசலில் பசியுடன் தன் மகன் நின்று கொண்டிருப்பதைக் கண்டார். மகன் பார்த்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தலையைத் திருப்பிக்கொண்டு, கண்ணீரோடு தன் நிலம் நோக்கிப் புறப்பட்டார். தன் மகனுடைய பசியைத் தீர்ப்பதற்குப் பயன்படக்கூடிய அந்தத் தானியங்களை அவர் நிலத்தில் தூவினார். மழை வரும், தான் மண்ணில் விதைத்த விதைகள் பல மடங்காய் பலன் தரும் என்ற நம்பிக்கையில் அவர் கண்ணீரோடு விதைத்துக் கொண்டிருந்தார். மழையோடு சேர்ந்து அவரது கண்ணீரும் அந்த விதைகளுக்கு நீர் வார்த்தது.
இந்தக் கதையில் நாம் கேட்ட இதே நிலை, இதே துயரம், துன்பம் உலகின் பல நாடுகளில் இன்றும் காணக்கிடக்கும் ஒரு வேதனையான உண்மை. இவர்கள் அனைவரும் கண்ணீரில் இப்போது விதைத்தாலும், மகிழ்வுடன் ஒரு நாள் நல்ல பலன்களை அறுவடை செய்து மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் நம் செபங்களை எழுப்புவோம்.

உடனுக்குடன் மகிழ்வைத் தேடும் இன்றைய உலகில் இந்தத் தந்தை செய்ததை மடமை என்றும் சொல்லக்கூடும். ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், சில உண்மைகள் புலப்படும். நிலையான, நீடித்த மகிழ்வைக் காண்பதற்கு நாம் தடைகளை, சவால்களைத் தாண்டவேண்டும். இந்த நேரங்கள் கண்ணீரைத் தரும் நேரங்கள். கவலை, கண்ணீர், தடை, சவால் இவைகளை இறைவன் மீது கொண்ட நம்பிக்கையோடு நாம் எதிர்கொண்டால், நிலையான நீடித்த மகிழ்வைக் காணமுடியும் என்பதை இந்தத் திருப்பாடல் நமக்குச் சொல்லித் தருகிறது.
கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள் என்று இந்தத் திருப்பாடலில் நாம் காணும் நம்பிக்கை வரிகளைப் போல, இன்னும் பல திருப்பாடல்களில் நம்பிக்கை தரும் வரிகள் உள்ளன. அவற்றில் ஒரு சில வரிகளை மீண்டும் நினைவில் கொணர்ந்து, நம் நம்பிக்கையை வளர்க்கும் ஒரு முயற்சியுடன் இன்றைய விவிலியத் தேடலை நிறைவு செய்வோம்.
திருப்பாடல் 31: 19,24
ஆண்டவரே,
உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே, நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள்.
திருப்பாடல் 27: 13-14
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.








All the contents on this site are copyrighted ©.