2012-06-12 16:12:02

அனைத்துலக திருநற்கருணை மாநாட்டில் புனித பூமிப் பிரதிநிதிகள்


ஜூன்12,2012. அயர்லாந்தில் தங்களது கத்தோலிக்க விசுவாசத்தை நடைமுறைப்படுத்துவோரின் எண்ணிக்கை அண்மைக் காலமாகக் குறைந்து வரும்வேளை, அந்நாட்டுத் திருஅவையோடு தங்களது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதற்காகப் புனித பூமியிலிருந்து அயர்லாந்துக்குத் திருப்பயணிகளாகத் தாங்கள் வந்திருப்பதாக எருசலேம் துணை ஆயர் வில்லியம் ஷோமாலி கூறினார்.
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டில் கலந்து கொள்ளும் ஆயர் ஷோமாலி, ஜோர்டன், பாலஸ்தீனம், இஸ்ரேல், இன்னும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள புனிதபூமிக் கிறிஸ்தவப் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கு கொள்வதாகக் கூறினார்.
பல்வேறு திருவழிபாட்டுரீதிகளைச் சேர்ந்த இப்பிரதிநிதிகள் திருநற்கருணையில் தாங்கள் கொண்டுள்ள விசுவாசத்தை ஆழப்படுத்தவும், அன்றாட வாழ்வில் திருநற்கருணையை எவ்வாறு வாழ்வது என்பது குறித்து மேலும் கற்றுக் கொள்ளவும் அயர்லாந்து வந்துள்ளதாகவும் ஆயர் ஷோமாலி கூறினார்.
மேலும், இந்த 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டில் இடம்பெற்று வரும் கருத்தரங்குகளும் செபங்களும் கிறிஸ்தவ ஒன்றிப்பையும் புதிய நற்செய்திப்பணியையும் வலியுறுத்துகின்றன என்று எமது வத்திக்கான் வானொலி நிருபர்கள் கூறுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.