2012-06-11 16:45:45

திருப்பீட அலுவல்களில் ஈடுபடுவதற்கென பயிற்சி பெற்றுவரும் அருள்பணியாளர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு


ஜூன்,11,2012. இறைவனிடமிருந்து மக்கள் பிரிந்தாலும், மக்களுடன் கொண்டுள்ள உறவில் இறைவன் எப்போதும் உறுதியாய் நிலைத்துள்ளார் என்பதை விவிலியத்தில் காண்கிறோம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
திருப்பீட அலுவல்களில் ஈடுபடுவதற்கென பயிற்சி பெற்று வரும் அருள் பணியாளர்களைப் பயிற்றுவிககும் நிறுவனத்தின் மாணவ குருக்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
திருஅவைக்கும், சிறப்பாக, புனித பேதுருவின் வழித்தோன்றலான திருத்தந்தைக்கும் மிகவும் பிரமாணிக்கமாய் இருக்க திருப்பீடப் பயிற்சி நிறுவனம் காட்டிவரும் அக்கறையைப் பாராட்டியத் திருத்தந்தை, இந்நிறுவனத்தில் பயிற்சி பெறுவதன் முக்கிய நோக்கங்களையும் எடுத்துரைத்தார்.
ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பயிற்சியை முடித்து, திருப்பீடத்தின் பல்வேறு பணிகளுக்கென உலகெங்கும் அனுப்பப்படும் அருள் பணியாளர்களைத் திருத்தந்தை சந்திப்பது வழக்கம். இவ்வாண்டு இப்பயிற்சி முடிந்து பணிகளுக்கு செல்லவிருக்கும் 40 அருள்பணியாளர்களைச் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்குத் தன் சிறப்பு ஆசீரை வழங்கி, வழியனுப்பி வைத்தார்.
“உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்”; “நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்” என்று மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ள வரிகளைக் கூறி, பயிற்சி நிறுவனத்தின் உறுப்பினர்களுக்குச் சிறப்பாக ஆசீர் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.