2012-06-11 16:45:01

திருநற்கருணை பவனிகளுக்குத் திருத்தந்தை பாராட்டு


ஜூன்11,2012. தெருக்கள் மற்றும் வளாகங்கள் வழியாகப் பாரம்பரியமாகத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் வெகு ஆடம்பரத் திருநற்கருணை பவனிகள் குறித்த தனது பாராட்டைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறன்று பல நாடுகளில் சிறப்பிக்கப்பட்ட இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழா, திருநற்கருணை மீதான பொது வழிபாட்டின் மாபெரும் செயலாக அமைந்துள்ளது என்றுரைத்த திருத்தந்தை, கொண்டாட்டங்களின் நேரங்களையும் கடந்து நம் ஆண்டவர் இந்த திருவருட்சாதனத்தில் என்றென்றைக்கும் பிரசன்னமாய் இருக்கிறார் என்று கூறினார்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, திருநற்கருணைத் திருப்பவனி சமயப் பழக்கம் குறித்துப் பேசினார்.
அண்மையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வட இத்தாலியின் எமிலியா ரொமாஞ்ஞா பகுதியில் ஆலயங்கள் சேதமடைந்துள்ள போதிலும், சில இடங்களில் கிறிஸ்துவின் திருஉடல் வைக்கப்பட்டுள்ள திருநற்கருணை பேழைகள் இடிபாடுகளுக்கு இடையில் இருந்தன எனவும், திறந்த வெளிகளில் அல்லது கூடாரங்களில் இஞ்ஞாயிறு திருப்பலிகளில் கலந்து கொண்ட இம்மக்களின் சாட்சிய வாழ்வுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை.
ஒருவர் மற்றவரது வாழ்வையும் சொத்துக்களையும், சுமைகளையும் பகிர்ந்து கொள்ளவும், ஒருவர் ஒருவரை வரவேற்கவும் இயலக்கூடிய சக்தி திருநற்கருணையிலிருந்து பிறந்து அதில் புதுப்பிக்கப்படுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
மேலும், இஞ்ஞாயிறன்று உலக இரத்ததானம் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டிப் பேசிய திருத்தந்தை, இரத்த தானம் வழங்குபவர்களைப் பாராட்டிப் பேசினார். இவர்களின் இந்தத் தானமானது, பல நோயாளிகளுக்கு இன்றியமையாதத் தேவையாக இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.