2012-06-11 16:47:19

சிரியாவில் வாழும் கிறிஸ்துவர்கள் செபத்திலும், உன்னாநோன்பிலும் ஈடுபடுமாறு கிரேக்கக் கத்தோலிக்கப் பேராயர் அழைப்பு


ஜூன்,11,2012. சிரியாவில் வாழும் மக்களுக்கு இறைவன் நீடித்த அமைதியை வழங்கவேண்டி அந்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்துவர்களும் செபத்திலும், உன்னாநோன்பிலும் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளார் தமாஸ்கு நகர் Melkite கிரேக்கக் கத்தோலிக்கப் பேராயர் மூன்றாம் Gregorios Laham.
பெந்தகோஸ்து எனப்படும் தூய ஆவியாரின் திருவிழாவுக்குப் பின், ஜூன் மாதம் கீழைரீதி கத்தோலிக்கத் திருஅவை, உண்ணா நோன்பு மேற்கொள்வது வழக்கம் என்று கூறிய பேராயர் Laham, ஜூன் மாதம் 29ம் தேதி கொண்டாடப்படும் புனித பேதுருவின் பெருவிழா வரை கத்தோலிக்க மக்கள் உண்ணாநோன்பை மேற்கொண்டு, சிரியாவில் அமைதி நிலவ செபிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிரியாவில் தொடர்ந்துவரும் வன்முறைகளால் மக்களுக்கு ஏற்படும் கண்ணீரைப் போக்க கிறிஸ்தவர்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த வழி செபமும் உண்ணா நோன்பும் என்று பேராயர் Laham எடுத்துரைத்தார்.
அண்மையில் 100க்கும் அதிகமான கிறிஸ்துவர்கள் கொலையுண்ட Homs நகருக்கு அடுத்த Qusayr நகரில் வாழ்ந்து வரும் கிறிஸ்தவர்கள் விரைவில் அந்நகரைவிட்டு வெளியேற வேண்டுமென்று தீவிரவாதக் குழுவினர் விடுத்துவரும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, அந்நகரைவிட்டு, கிறிஸ்தவர்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர் என்று கத்தோலிக்கச் செய்திகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.