2012-06-11 16:49:02

கூடங்குளம் பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய, இலங்கை - இந்திய அதிகாரிகள் ஜூலையில் சந்திப்பு


ஜூன்,11,2012. கூடங்குளம் அணு விபத்து பேரிடர் மேலாண்மை தொடர்பாக இந்திய அணுசக்தி அதிகாரிகளை இலங்கை அதிகாரிகள் ஜூலை 9 முதல் 15-ம் தேதிக்குள் புதுடில்லியில் சந்தித்துப் பேச இருக்கின்றனர்.
கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல், கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அது இலங்கையையும் பாதிக்கும் என்று அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, அணு விபத்து பேரிடர் மேலாண்மை தொடர்பாக இந்தியாவுடன் உடன்பாடு செய்துகொள்ள இலங்கை விரும்பியது. இதன் ஒருபகுதியாகவே இந்திய அதிகாரிகளுடன் இலங்கை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
புதுடில்லியில் நடக்கவிருக்கும் சந்திப்பின்போது இரு நாட்டு அதிகாரிகளும் இருதரப்பு உடன்பாடு தொடர்பாக ஆலோசிப்பார்கள் என்று இஞ்ஞாயிறன்று பேசிய இலங்கையின் அணுசக்தி ஆணைய தலைவர் இரஞ்சித் விஜயவர்த்தன தெரிவித்தார்.
கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியாகும் கதிரியக்கக் கழிவுகள் வங்கக்கடலை மாசுபடுத்தும். அதனால் இலங்கையின் கடலோரப் பகுதிகளில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று இலங்கை வார இதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.