2012-06-11 16:08:32

கவிதைக் கனவுகள் .... தங்கப்பாத்திரம்


சிற்றூர் ஒன்றில் வறுமையின் கொடுமையில்
ஏழ்மை அகலாதா, என் ஏக்கம் தீராதா
தேம்பித் தேம்பி அழுதார் செபித்தார்
சிற்றாலயப் பூசாரி.
அன்றிரவு கடவுள் கருணை காட்டினார்.
பூசாரி வீட்டுக் கொல்லைப்புறத்தில்
புதிதாக ஒரு தங்கப்பானை.
பூரித்துப்போன பூசாரி எட்டிப் பார்த்தார்
பானை நிறையத் தண்ணீர்.
வெற்றுப்பானையை விற்று
வீட்டுக் கடனை அடைத்தார்
விரும்பிய வாழ்வும் வந்தது.
சிலகாலத்துக்குள் குடும்பத்தில் குழப்பம்
ஆளாளுக்குப் பங்குத்தொகை கேட்டு நச்சரிப்பு
கிடைத்த நிம்மதி பறந்து விட்டது பூசாரிக்கு.
மீண்டும் செபித்தார் கடவுளிடம் நிம்மதிவேண்டி.
தங்கப்பானையைத் தந்து பிரச்சனையை
தாங்க முடியாமல் ஆக்கிவிட்டீரே என முறையிட்டார்.
கடவுள் பேசினார் –
தங்கப்பானைத் தண்ணீர் எங்கே, அது காலியாகவா இருந்தது.
ஏதோ தண்ணீர் என்று கீழே ஊற்றிவிட்டேன்.
அவசரப்பட்டுவிட்டாயே பக்தா
அதில் உனக்கும் உனது குடும்பத்துக்கும் தேவையான
திருப்தி என்ற அமிர்தம் இருந்ததே.
பக்தா, மனிதர் செய்யும் ஒவ்வொரு வேலையும்
திருப்தி என்ற அமிர்தம் நிறைந்த தங்கப்பாத்திரம்தான்.








All the contents on this site are copyrighted ©.