2012-06-09 15:01:34

திருத்தந்தை: திருமணத்தின் புனிதம் பாதுகாக்கப்படுமாறு அழைப்பு


ஜூன் 09,2012. கத்தோலிக்க அறநெறிப் போதனைகளுக்கு ஒத்துச்செல்லும் விதத்தில் திருமணம் மற்றும் குடும்பம் குறித்த நற்செய்திப்பணிகளுக்கு ஆயர்கள் தங்களது மேய்ப்புப்பணியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
Papua New Guinea மற்றும் Solomon தீவுகள் நாடுகளின் ஆயர்களை அட் லிமினா சந்திப்பையொட்டி இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே இடம்பெறும் திருமணத்தின் இயற்கையான பந்தத்தின் அடிப்படையில் அமைந்த குடும்பத்தையே திருஅவை சோர்வின்றி அறிவித்து வருகிறது என்று கூறினார்.
திருமணத்தின் புனிதம் பாதுகாக்கப்படுவதற்குத் தமது குருதியைச் சிந்திய அருளாளர் Peter To Rot பிறந்ததன் நூறாம் ஆண்டு சிறப்பிக்கப்பட்டுவரும் இந்நாள்களில் திருமணமான தம்பதியர் இப்புனிதரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி நடக்குமாறும் திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.
உதவி தேவைப்படும் ஏழைகள், நோயாளிகள், குறிப்பாக எய்ட்ஸ் நோயாளிகளுக்கும், பொதுநலவாழ்வில் அறநெறிக் கோட்பாடுகள் காக்கப்படுவதற்கும் Papua New Guinea மற்றும் Solomon தீவுகள் நாடுகளின் ஆயர்கள் செய்து வரும் பல்வேறு மேய்ப்புப்பணிகளை உற்சாகப்படுத்திய திருத்தந்தை, இப்பணிகளில் ஆயர்கள் அரசு அதிகாரிகளுடன் உரையாடலை மேற்கொண்டு ஆற்றிவரும் பணிகளைத் தொடர்ந்து செய்யுமாறும் ஊக்கப்படுத்தினார்.
மீட்பு வரலாற்றில் கலாச்சாரத்தின் முக்கிய பங்கைச் சுட்டிக்காட்டிய அவர், கடவுள் தமது ஒரே மகனை ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தில் பிறக்க வைத்தார் என்றும் கூறினார்.
ஆயர்கள் தங்களது நற்செய்திப்பணியில் அந்தந்த மக்களின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நற்செய்தி உண்மைகளை எடுத்துரைக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, மனிதர் ஏற்படுத்தியுள்ள எல்லைகளையும் கடந்து எல்லா நாடுகளுக்கும் நற்செய்தியை அறிவிப்பதற்குத் திருஅவை அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்நற்செய்தி அறிவிப்புப்பணியில் குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலை விசுவாசிகளின் சாட்சியவாழ்வு இன்றியமையாதது என்றும் திருத்தந்தை Papua New Guinea மற்றும் Solomon தீவுகள் நாடுகளின் ஆயர்களிடம் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.