2012-06-09 15:03:18

காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் ஏற்படும் தாக்கம்


ஜூன் 09,2012. காலநிலை மாற்றம் தொடர்பாக இந்தியாவில் ஏற்படும் தாக்கம், அதற்கு அரசு எடுத்துள்ள தடுப்பு நடவடிக்கைகைள் உள்பட பல்வேறு அம்சங்கள் கொண்ட விளக்க அறிக்கையை இந்தியா ஐ.நா.விடம் சமர்ப்பித்துள்ளது.
வனம், வேளாண்மை, நலவாழ்வு, வெப்பநிலை, மழையளவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் ஏற்படும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக புனே நகரில் உள்ள செம்பியாஸிஸ் அனைத்துலக பல்கலைக் கழகத்தின் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறையின் தலைவர் பிரகாஷ் ராவ் தெரிவித்தார்.
வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் உயரும்போது, கோதுமையின் உற்பத்தி 6 மில்லியன் டன் குறைய வாய்ப்பு உள்ளதாகவும், அரிசி, உருளைக்கிழங்கு போன்றவற்றின் உற்பத்தியும் பாதிக்கப்படும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் வெப்பநிலை எல்லா இடங்களிலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும், 3.5 டிகிரி சென்டிகிரேட் முதல் 4.5 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்றும், அது அடுத்த 50 ஆண்டுகள் வரை படிப்படியாக உயரும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நலவாழ்வைப் பொருத்தவரை, டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு விதமான நோய்கள் பரவக்கூடும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் ராவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் அறிக்கை, 2005-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.