2012-06-08 16:50:03

வார்த்தைகள் எப்போதும் நம்மைச் சூழ்ந்திருப்பதால், வார்த்தைகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை - கர்தினால் Kurt Koch


ஜூன்,08,2012. நாம் வாழும் இன்றைய உலகில் வார்த்தைகள் பல வடிவங்களில் நம்மை வந்தடைந்தவண்ணம் உள்ளன. பெருவெள்ளமென வார்த்தைகள் எப்போதும் நம்மைச் சூழ்ந்திருப்பதால், வார்த்தைகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால், இறைவார்த்தைகளுக்கும் இதே நிலை உருவாகும் ஆபத்து உள்ளது என்று கர்தினால் Kurt Koch கூறினார்.
அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெறவிருக்கும் 50வது அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்கு முன்னர் Maynooth எனுமிடத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஒரு இறையியல் கருத்தரங்கில், இவ்வெள்ளியன்று காலை திருப்பலியாற்றிய கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Koch, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
இறைவார்த்தையைப் பகிர்வதும், இறையுடலைப் பகிர்வதும் கத்தோலிக்கர்களின் விசுவாசத்தின் அடித்தளமாய் அமைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Koch, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் புனித நூலுக்கு வழங்கும் மதிப்பை நாம் மீண்டும் கண்டுணர்வது முக்கியம் என்று கூறினார்.
"திருநற்கருணை: கிறிஸ்துவுடனும் ஒருவர் ஒருவருடனும் நாம் கொள்ளும் ஒருமைப்பாடு" என்ற தலைப்பில் நடைபெறும் அகில உலக திருநற்கருணை மாநாடு இறைவார்த்தையிலும், இறையுடலிலும், விசுவாசிகள் குடும்பத்திலும் ஆழமான உண்மைகளைக் காண உதவிசெய்வதாக என்று கர்தினால் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.