2012-06-08 16:49:39

திருஅவையின் நற்செய்திப் பணிகள் அனைத்திற்கும் ஒரு சிகரமாகத் திகழ்வது திருநற்கருணை


ஜூன்,08,2012. அருளாளர் திருத்தந்தை 23ம் ஜான் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை கூட்டியபோது, திருஅவையின் படிப்பினைகளைத் தற்காலத்திற்கு ஏற்றதாக மாற்றுவதையும், கிறிஸ்தவர்களின் ஒன்றிப்பை வளர்ப்பதையும் இரு முக்கிய கருத்துக்களாக வலியுறுத்தினார் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
"ஒருமைப்பாட்டின் திருஅவை இயல் : இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் துவங்கி 50 ஆண்டுகள்" என்ற தலைப்பில் அயர்லாந்தின் Maynooth என்ற இடத்தில் நடைபெற்றுவரும் இறையியல் கருத்தரங்கின் முதல் நாளன்று உரையாற்றிய திருப்பீட ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet, இவ்வாறு கூறினார்.
திருஅவையின் நற்செய்திப் பணிகள் அனைத்திற்கும் ஒரு சிகரமாகத் திகழ்வது திருநற்கருணை என்று அருளாளர் இரண்டாம் ஜான்பால் கூறிய வார்த்தைகளை எடுத்துக் கூறிய கர்தினால் Ouellet, ஒருமைப்பாட்டுத் திருஅவை இயல் என்பதன் அடித்தளம் திருநற்கருணைதான் என்று சுட்டிக்காட்டினார்.
திருஅவையில் தற்போது விளங்கும் பல்வேறு துறவு சபைகள், திருஅவை இயக்கங்கள், பொதுநிலையினரின் நற்செய்திப் பணிகள் அனைத்துமே புனித பவுல் கூறிய இறைவனின் கொடைகள் என்பதை நமக்கு மீண்டும் நினைவுறுத்தியது இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கமே என்று கர்தினால் Ouellet தன் உரையில் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.