2012-06-08 16:49:25

இயேசுவின் திருஉடல், திருஇரத்தத் திருவிழா திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


ஜூன்,08,2012. திருப்பலியின்போது சிறந்ததொரு வழியில் நம் மத்தியில் பிரசன்னமாகும் இறைமகன் இயேசு, தொடர்ந்து ஆலயங்களில் அமைதியாகப் பிரசன்னமாகி, நம் தனிப்பட்ட வாழ்க்கைக்காகப் பரிந்து பேசுகிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வியாழன் மாலை உரோம் நகரின் புனித ஜான் லாத்தரன் பசிலிக்கா பேராலயத்தில் இயேசுவின் திருஉடல், திருஇரத்தத் திருவிழா திருப்பலியை நிகழ்த்தியத் திருத்தந்தை, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
மத நம்பிக்கையற்ற உலகை உருவாக்க விழையும் பல்வேறு சக்திகளால் புனித அடையாளங்கள் உலகிலிருந்து தொடர்ந்து நீக்கப்பட்டு வருகின்றன என்ற எச்சரிக்கையை விடுத்தத் திருத்தந்தை, இத்தகைய உலகில் மனசாட்சியின் குரல் பெரிதும் மௌனமாக்கப்படுகிறது என்று கூறினார்.
கடவுளின் தொடர்ந்த பிரசன்னம் நமக்குத் தேவை என்பதை அப்ப, இரச வடிவில் நம் மத்தியில் இயேசு கொடையாக அளித்துச் சென்றுள்ளார்; அவர் தந்த இந்த அற்புதக் கொடைகளுக்கு நன்றி செலுத்தவே நாம் கூடி வந்திருக்கிறோம் என்று திருத்தந்தை இவ்விழாவின் மையப் பொருளை எடுத்துரைத்தார்.
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இத்திருப்பலிக்குப் பின்னர், லாத்தரன் பசிலிக்காவில் இருந்து புனித மரியன்னை பசிலிக்கா பேராலயத்திற்கு மேற்கொள்ளப்பட்ட திருநற்கருணைப் பவனியில் கலந்து கொண்ட திருத்தந்தை, பவனியின் இறுதியில் திருநற்கருணை ஆசீரையும் வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.