2012-06-07 15:18:49

லிபியாவில் மக்களின் வாழ்க்கை மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது


ஜூன்,07,2012. லிபியாவில் மக்களின் வாழ்க்கையும், கத்தோலிக்கத் திருஅவையின் வாழ்க்கையும் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது என்று Benghaziயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Sylvester Carmel Magro, கூறினார்.
கடந்த ஆண்டு லிபியாவில் நிகழ்ந்த உள்நாட்டுப் போருக்குப் பின் திருஅவை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதை Fides செய்தி நிறுவனத்திற்கு எடுத்துக்கூறிய ஆயர் Magro, ஆங்காங்கே மோதல்களும், குண்டு வெடிப்பு நிகழ்வுகளும் தொடர்ந்தாலும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்று எடுத்துரைத்தார்.
இயல்பு நிலைக்கு தங்கள் வாழ்வு திரும்பி வருகிறது என்பதற்கு, இவ்வெள்ளியன்று மீட்பின் அன்னைக்கு எடுக்கப்படும் நவநாள் முயற்சிகள் ஓர் எடுத்துக்காட்டு என்றும் ஆயர் Magro சுட்டிக்காட்டினார்.
லிபியாவில் உள்ள கத்தோலிக்கர்களில் பெரும்பாலானோர் பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்தும், ஆப்ரிக்க நாடுகளிலிருந்தும் இங்கு வேலைதேடி வந்தவர்கள் என்பதால், அவர்கள் மத்தியில் மரியன்னை மீது மிகுந்த பக்தி உள்ளது என்பதையும் Benghaziயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி கூறினார்.








All the contents on this site are copyrighted ©.