2012-06-07 15:18:06

கால்பந்து விளையாட்டு ஒருவர் மற்றவரை மதிக்கக் கற்றுக்கொடுக்கும் கல்விக்கூடம் - திருத்தந்தை


ஜூன்,07,2012. கால்பந்து விளையாட்டு ஒருவர் மற்றவரை மதிக்கக் கற்றுக்கொடுக்கும் கல்விக்கூடம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
போலந்து மற்றும் உக்ரேய்ன் நாடுகளில் இவ்வெள்ளியன்று தொடங்கும் ஐரோப்பிய கால்பந்து விளையாட்டுப் போட்டிகளையொட்டி போலந்து ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Józef Michalikக்கு செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, இந்த விளையாட்டில் ஏற்படும் போட்டி மனப்பான்மைகள், தன்னலத்தைத் தியாகம் செய்து குழுவின் நலனுக்காக விளையாட அழைக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்பண்பானது சகோதரத்துவம் மற்றும் அன்பில் வளர உதவுகின்றது என்றும், இதுவே உண்மையான பொதுநலனை ஊக்குவிக்க உதவும் என்றும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.
விளையாட்டுகள், அவற்றை நடத்துவோர், அவற்றில் விளையாடுவோர் மற்றும் அவற்றைப் பார்வையிடுவோரை அவை உள்ளடக்கியிருந்தாலும், அவ்விளையாட்டுகள் இடம்பெறும் நாள்களில் திருவழிபாடுகள், மறைக்கல்வி, செபம் ஆகிய ஆன்மீகக் காரியங்களில் திருஅவையும் அக்கறை எடுக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
இம்மாதம் 8ம் தேதி முதல் ஜூலை ஒன்றாந்தேதி வரை ஐரோப்பிய கால்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.