2012-06-06 15:37:29

மேய்ப்புப்பணி பயணங்களால் கிடைக்கும் அருள் வரங்கள் உள்ளத்தில் புத்துணர்ச்சியைத் தருகின்றது - திருத்தந்தை


ஜூன்,06,2012. மேய்ப்புப்பணி பயணங்கள் உடலளவில் சோர்வைத் தந்தாலும், இப்பயணங்களால் கிடைக்கும் அருள் வரங்கள் உள்ளத்தில் புத்துணர்ச்சியைத் தருகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன்னிடம் உரைத்ததாக மிலான் நகரப் பேராயர் கர்தினால் Angelo Scola கூறினார்.
மேமாதம் 30ம் தேதி முதல், ஜூன் மாதம் 3ம் தேதி வரை ஐந்து நாட்களாக மிலான் நகரில் நடைபெற்ற அகில உலக குடும்ப மாநாட்டின் முக்கிய அம்சங்களைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மிலான் பேராயர் கர்தினால் Scola, இந்த மாநாட்டின் சிகரமாக அமைந்தது திருத்தந்தையின் இறுதித் திருப்பலி என்றுரைத்தார்.
Bresso விமானத்தளத்தில் நடைபெற்ற இந்தத் திருப்பலியில் 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் என்பதை மகிழ்வுடன் எடுத்துரைத்த கர்தினால் Scola, திருத்தந்தையின் மீது கத்தோலிக்க மக்களும், பிற மதங்களைச் சார்ந்த மக்களும் கொண்டிருக்கும் மதிப்பும் அன்பும் மிலான் நகர நிகழ்வுகளில் வெளியானது என்று கூறினார்.
இத்தாலிய ஊடகங்களும், இன்னும் பிற ஊடகங்களும் வத்திக்கானைக் குறித்தும், திருத்தந்தையைக் குறித்தும் வெளியிட்டுவரும் ஆதாரமற்ற செய்திகள் மக்கள்மீது எந்தவித எதிர்மறையான பாதிப்புக்களையும் உருவாக்கவில்லை என்பதை மிலான் நகரில் திருத்தந்தைக்கு வழங்கப்பட்ட ஆரவாரமான வரவேற்பு உலகிற்கு உணர்த்தியது என்று கர்ஹினால் Scola செய்தியாளர்களிடம் வலியுறுத்திக் கூறினார்.
பிரச்சனைகள் நிறைந்த உலகில் திருஅவை உயிர் பெற்றுத் திகழ்வதற்கு மக்களே காரணம் என்பதை இச்செய்தியாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்திக் கூறிய திருப்பீடக் குடும்ப அவையின் தலைவர் கர்தினால் Ennio Antonelli, திருஅவையைக் குறித்து சொல்லப்படும் அவதூறுகளுக்குக் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் வாழும் இத்திருஅவையைக் குறித்து கவனம் செலுத்துவது சிறந்தது என்று எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.