2012-06-05 15:02:52

விவிலியத் தேடல் - திருப்பாடல் 125


RealAudioMP3 சமூகத் தொடர்பியல் துறையில் அரிஸ்டாட்டில் காலத்திலிருந்தே ஒரு முக்கியப் பாடம் Persuasion. பிறரை நம்ப வைக்கும் கலை என்று தமிழில் இதைச் சொல்லலாம். பிறரை நம்ப வைப்பதற்குப் பல வகையான வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறார்கள். பிறரை நம்ப வைக்கும் இக்கலை இருவிதங்களில் நடைபெறுகிறது என்று சமூக தொடர்பியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள். ஒன்று Response shaping persuasive process. அதாவது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பொருள் அல்லது சிந்தனைக்கு ஏற்ற பதிலளிக்குமாறு அல்லது செயல்படுமாறு ஒரு நபரை உருவாக்குவது. எடுத்துக்காட்டாக, இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகள் வழியாகச் சொல்லிக்கொடுத்து குழந்தைகளை இறைநம்பிக்கை உள்ளவர்களாக உருவாக்குவதைச் சொல்லலாம். இரண்டாவது Response reinforcing persuasive process என்று சொல்வார்கள். அதாவது இறைநம்பிக்கையில வளர்க்கப்பட்ட குழந்தைகள் பல்வேறு தடைகள் வரினும், இக்கட்டான சூழ்நிலைகள் வரினும் சிறுவயதிலிருந்து சொல்லிக்கொடுக்கப்பட்ட இறைநம்பிக்கையிலே தளர்ந்துவிடாமல் உறுதியாக இருக்கவேண்டும் என்று சொல்லி, அவர்கள் கொண்ட இறைநம்பிக்கையை வலிமையூட்டுவதைச் சொல்லலாம். மேற்சொன்னவற்றில் இரண்டாவதாகச் சொல்லப்பட்டதைத்தான் நாம் இன்று சிந்திக்கும் திருப்பாடல் 125ல் ஆசிரியர் பயன்படுத்தியிருக்கிறார்.

புறவினத்தார் இஸ்ரயேலரைத் துன்புறுத்திய வேளையில் இஸ்ரயேல் மக்களில் பலர் தீய வழிகளில் ஈடுபட்டனர். எஞ்சியிருந்த சில பற்றுறுதிமிக்க மக்களை, இறைவன் உங்களைக் காப்பார், உங்களது இறைநம்பிக்கை உங்களைக் காக்கும் எனத் தேற்ற பாடப்பட்டப் பாடலாக அமைந்துள்ளது இத்திருப்பாடல். சுற்றியுள்ள மலைகள் எருசலேமைப் பாதுகாப்பதுபோல ஆண்டவரின் பிரசன்னம், எஞ்சியிருக்கும் இஸ்ரயேல் மக்களைப் பாதுகாக்கும் என்பது பாடலின் சாரம். இப்பாடலை ஆழ்ந்து சிந்திக்கும்போது, இரு கருத்துகள் வெளிப்படுகின்றன. இப்பாடலின் முதற்பகுதியில், ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்போரை அவர் காப்பார் என்றும், இரண்டாம் பகுதியில் நல்லவர்கள் வாழுமிடத்தில் தீயவர்கள் ஆதிக்கம் செலுத்த முடியாது; ஒருவேளை தீயவர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், இறுதியில் நேர்மையாளருக்கே வெற்றி என்பதையும் அழகாகச் சொல்கிறார். இரத்தினச்சுருக்கமாக ஐந்தே ஐந்து சொற்றொடர்களைக் கொண்ட இப்பாடலை ஒவ்வொரு சொற்றொடராக பார்ப்போம் இதோ முதல் சொற்றொடர்.

ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துள்ளோர் சீயோன் மலைபோல் என்றும் அசையாது இருப்பர்.
சீயோன் மலை என்பது கடவுளுடைய மலை. அது அவர் வாழுமிடம் என்பதே இஸ்ரயேலின் நம்பிக்கை. வழக்கமாக, சீயோன் மலையை இறைவனுக்கு மட்டுமே ஒப்பிட்டுக் கூறுவார்கள். ஆனால் இப்பாடலில் இறை நம்பிக்கைகொண்ட மக்களைச் சீயோன் மலைக்கு ஒப்பிடுகிறார் ஆசிரியர். இறைநம்பிக்கை கொண்டவர்களைச் சீயோன் மலையோடு ஒப்பிடப்படுவதால், அவர்களும், அவர்கள் இதயமும் இறைவன் வாழுமிடமாக மாறுகிறது. சீயோன் மலையை எதிர்த்து யாராலும் போராடமுடியாது. அதேபோல இறைநம்பிக்கை கொண்டவர்களையும் போராடி வெல்லமுடியாது. எனெனில், அவர்கள் அந்த அளவு வலிமைகொண்டவர்கள் என்று சொல்லப்படுகிறது.
இறைநம்பிக்கை என்பது வெறுமனே இறைவன் மீது நம்பிக்கை வைப்பதோடு முடிந்துவிடுவதல்ல. அவ்வாறு நம்பிக்கை கொள்ளும்போது இறைவன் தம்மீது நம்பிக்கை வைப்போரில் குடியேறுகிறார். எனவேதான் இறைமனிதர்களில் அசாதாரணமான மனதிடமும், எதையும் மேற்கொள்ளக்கூடிய மனத்துணிவும் வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது.

15ம் நூற்றாண்டின் முற்பகுதியில், வெளியுலகிற்கு வராமல் நான்கு சுவர்களுக்குள்ளேயே இருந்துகொண்டு செபிக்கும் வழக்கமுடைய கார்மெல் துறவு வாழ்வு ஸ்பெயின் நாட்டில் கேலிக்கூத்தாக இருந்தது. துறவிகள் வெளியில் செல்லவில்லை. ஆனால் வெளியிலிருந்து பலரும் வந்து துறவு வாழ்வின் உண்மை நோக்கத்தையும், புனிதத்தையும் கேலியாக்கிக் கொண்டிருந்தனர். தான் வாழ்ந்துகொண்டிருந்த அவிலா நகரில் மனுவுருவேற்பு என்னும் பெயர்கொண்ட துறவகத்திலேயே இத்தகைய நிலையைக் கண்டு வேதனையடைந்தார் இயேசுவின் தெரசாள். இவரை அவிலா தெரசாள் என்றும் அழைக்கிறோம். எனவே துறவு வாழ்வின் ஊற்றுக்குச் செல்ல முடிவுசெய்த அவர், தான் கொண்டிருந்த இறைநம்பிக்கையில் புதிய துறவகம் ஒன்றை யோசேப்பின் பாதுகாவலில் அவிலா நகரின் வேறொரு பகுதியில் துவங்கினார். இதற்குப் பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆயர்களும், பிரபுக்களும் கண்டனம் தெரிவித்தனர். மக்களைத் தூண்டிவிட்டு துறவகத்தைச் சேதப்படுத்தினர். இத்தனை எதிர்ப்புகளுக்கும் இயேசுவின் தெரசாள் அயரவில்லை. மேலும் புதிய துறவகங்களை நிறுவினார். இதற்குக் காரணம் இத்திருப்பாடலில் சொல்லப்படுகின்ற சீயோன் மலை போலவும் அவரது இறைநம்பிக்கை உறுதியானது.
இறைவனை யாராலும் அசைக்க முடியாது. அவரில் நம்பிக்கைக் கொள்வோரிடத்தில் அவர் தங்கி வாழ்கிறார். எனவே, அவர்களையும் அசைக்க முடியாது, அவர்கள் கொண்ட இறைநம்பிக்கையையும் அசைக்கமுடியாது என்று சொல்லி இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார்.

பொதுவாக, நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதைத்தான் எல்லாருமே அழுத்தம் கொடுத்துப் பேசுவார்கள். ஆனால் இப்பாடலின் ஆசிரியர் நம்பிக்கைகொண்டு வாழ்வோரை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களது நம்பிக்கையைப்பற்றி பெருமையாகப் பேசுகிறார். அவர்களது நம்பிக்கையை நினைத்துப் பெருமிதமடைகிறார். நேர்மையாளராக வாழ்வோரை, நல்ல காரியங்களைச் செய்வோரை கண்டிப்பாகப் பாராட்டவேண்டும், ஊக்கப்படுத்தவேண்டும். ஏனெனில் மனிதவாழ்வு பரிசு மற்றும் தண்டனை என்பவற்றால்தான் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. இப்பாடலின் இரண்டாவது சொற்றொடரில் ஆசிரியர் ஓர் உருவகத்தை பயன்படுத்துகின்றார்.
எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பதுபோல, ஆண்டவர் இப்போதும், எப்போதும் தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார்.
தமிழர், நிலங்களை பிரிப்பதுபோல் பிரித்தால், எருசசேலம் மலையும், மலை சார்ந்த இடமுமாகிறது. மலை என்பது ஒரு நாட்டிற்கு மிகப்பெரிய அரண், பாதுகாப்பு. எதிரிகளின் படையெடுப்பைத் தடுக்க செயற்கையாகக் கோட்டைகளைக் கட்டுவர்; ஆனால் அக்கோட்டைகள் கூட தகர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மலைகளைக்கொண்ட நாடுகள் இயற்கை அரணை பெற்றிருக்கின்றன. இம்மலைகள் நாட்டைப் பாதுகாக்கின்றன. அதேபோல, நம்பிக்கை கொண்டோருக்கு இறைவன் அரணாக இருக்கிறார். அவர்களின் இறைநம்பிக்கையைக் குலைக்க விரும்புவோரிடமிருந்து அவரே அவர்களைக் காக்கின்றார். சற்றுமுன், இயேசுவின் தெரசாளைப் பற்றிக் குறிப்பிட்டேன். அவருக்கு வந்த எதிர்ப்புகள் அனைத்தையும் தகர்த்தெறிவதற்குத் தேவையான எல்லாவற்றையும் இறைவன் வழங்கியிருந்தார். அவரும் தெரசாவோடு இருந்தார். பார்ப்பவரை மயக்கும் அழகையும், பெண்களுக்கு எந்த உரிமையுமே இல்லாத காலத்தில், உலக நடப்பை புத்தகங்கள் வழியே அறியும் திறமையையும், பிறர் சொல்ல வருவதை யூகித்து அவர்களுக்குச் சரியான பதில் கொடுக்கும் அளவுக்கு கூர்மையான அறிவையும் இறைவன் அவருக்குக் கொடுத்திருந்தார். இவரோடு பேசிக்கொண்டிருப்பதற்கு மன்னர்களும், பிரபுக்களும், குருக்களும் தவம் கிடப்பார்களாம். ஒரு வகையில் இவையனைத்துமே இவருக்கு வந்த எதிர்ப்புகளைத் தகர்க்க உதவின என்று சொன்னால் அது மிகையாகாது. தெரசாவோடு சேர்ந்து கார்மெல் சபையின் புதுப்பித்தலுக்குப் பாடுபட்ட சிலுவை யோவானுக்கு ஆட்சியாளர்கள் சார்பிலும், மதத்தலைவர்கள் சார்பிலும் வந்த எல்லா இன்னல்களையும், இக்கட்டுகளையும் இதுபோன்ற அரசர்கள், பிரபுக்கள் வழியாகத்தான் தெரசா தவிடுபொடியாக்கினார். எனவே இறைவன் நம்பிக்கையாளர்களைப் பல்வேறு வழிகளில் விதங்களாக பாதுகாக்கிறார் என்பது திண்ணம்.

இப்பாடலின் மூன்றாவது சொற்றொடருக்குக் கடந்து செல்வோம்.
நல்லார்க்கென ஒதுக்கப்பட்ட நாட்டில் பொல்லாரின் ஆட்சி நிலைக்காது; இல்லையெனில் நல்லாரும் பொல்லாதது செய்ய நேரிடும்.
இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட நாடு இறைவன்மீது நம்பிக்கைக்கொண்ட இஸ்ரயேல் மக்களுக்கு உரியது. புறவினத்தார் எருசலேமைச் சுற்றிலுமிருந்து அச்சுறுத்தலாம். பல்வேறு தொல்லைகள் தரலாம். ஆனால், எதிரிகளின் கை ஓங்காது. ஏனெனில், இது இறைவனால் தன்மீது நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாடு. எருசலேம் இறைவனின் நகர். எனவே, எதிரிகள் இந்நகரை வெற்றிகொள்ள முடியாது. இஸ்ரயேல் எதிரிகளை எதிர்க்கத் தேவையில்லை. எனவே புறவினத்தாரைப்போல இஸ்ரயேல் மக்கள் பொல்லாதது எதுவும் செய்யத் தேவையுமில்லை.
இன்றைய வாழ்க்கையில் நல்லவர்களாக, நேர்மையாளர்களாக, இறைநம்பிக்கை கொண்டவர்களாக வாழ்ந்தாலும், சிலருக்கு வாழ்க்கை அச்சம் நிறைந்ததாகவே உள்ளது. ஏனெனில், நம்பிக்கையுள்ள மனிதர்களுக்கும் பல்வேறு துன்பங்களும், துயரங்களும் வரத்தான் செய்கின்றன. “இப்படிப்பட்ட நல்ல மனிதருக்கா இப்படி நிகழ்ந்தது”? என்று பலரைப் பார்த்து நமது மனம் அங்கலாய்த்திருக்கிறதல்லவா? ஆனால், இப்படிப்பட்ட இறைநம்பிக்கைகொண்ட மனிதர்களை ஆசிரியர் திடப்படுத்துகின்றார். துன்பங்களும், துயரங்களும் வரும். ஆனால், இறுதியில் இறைவன் இருக்கிறார். ஒரு போதும் கைவிடமாட்டார். எருசலேமை மலைகள் சூழ்ந்துள்ளதைப்போல, இறைவன் உங்களை சூழ்ந்திருக்கிறார். எனவே, அஞ்சாதீர்கள்! என்று திடப்படுத்துகிறார்.

அடுத்ததாக இப்பாடலின் நான்காவது சொற்றொடர்
ஆண்டவரே! நல்லவர்களுக்கும், நேரிய இதயமுள்ளவர்களுக்கும் நீர் நன்மை செய்தருளும்.
இதுவரை நம்பிக்கை கொண்டோரை பாராட்டி அவர்கள் வைத்த நம்பிக்கையைப் பற்றி சொல்லி, இறைவன் அவர்களோடு இருந்து அவர்களைக் காப்பார் என்று சொன்ன ஆசிரியர் நல்லவர்களுக்காகவும், நேர்மையாளர்களுக்காகவும் செபிக்கிறார்.

இப்பாடலின் இறுதி சொற்றொடர்
கோணல் வழிநோக்கித் திரும்புவோரை ஆண்டவர் தீயவரோடு சேர்த்து இழுத்துச் செல்வார். இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!
கோணல் வழி நோக்கித் திரும்புவோர் என்பது இஸ்ரயேலில் நேர்மையற்ற சிலரையோ அல்லது புறவினத்தாரையோ குறிக்கிறது என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். ‘கூடவே இருந்து குழிபறிப்போர்’ என்று சொல்வதைப்போல இஸ்ரயேல் மக்களோடு இருந்துகொண்டே சிலர், நம்பிக்கையாளர்களைக் கெடுத்துக்கொண்டிருந்தனர். இத்தகையவர்களை இறைவன் பார்த்துக் கொள்வார். அதோடு, இஸ்ரயேலுக்குத் தீங்கு செய்வோரை நினைத்தும் கவலைப்படவேண்டாம். இறைவன் அவர்களைப் பார்த்துக் கொள்வார். நம்பிக்கையாளர்களை தீய வழியில் நடத்திச்செல்ல முயலும் பொல்லாரை இறைவன் இழுத்துச் செல்வார் என்று இஸ்ரயேலரை திடப்படுத்துகின்றார் ஆசிரியர்.
இப்பாடல் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டாலும் இன்றும், இதேபோன்ற நிலை இல்லாமல் இல்லை. நம்பிக்கையாளர்களுக்குச் சோதனைகளும், துன்பங்களும் வந்துகொண்டுதான் உள்ளது. அதேவேளையில் தீமை செய்கிறவர்கள் சுகபோகத்தோடு வாழ்கிறார்கள். இதைப் பார்க்கிற நேர்மையாளர்களுக்கு இவ்வுலகப் போக்குக்கு ஏற்றவாறு நாமும் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும், இல்லையென்றால் பிழைக்க முடியாது என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை. எனவே இப்பாடல் 21ம் நூற்றாண்டில் வாழும் நமக்கும் வழித்துணையாகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இறைநம்பிக்கையில் நம் வாழ்க்கையைத் தொடர்வோம். இறைவன் துணையாக, அரணாக இருந்து நம்மைக் காப்பார்.








All the contents on this site are copyrighted ©.