2012-06-05 15:19:49

உலகின் பசியைப் போக்குவதற்கு உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு காரித்தாஸ் தலைவர் அழைப்பு


ஜூன்,05,2012. உலகில் பசியால் ஒவ்வொரு 12 வினாடிகளுக்கும் ஒரு குழந்தை இறக்கும்வேளை, பசிக்கொடுமை தவிர்க்க முடியாதது அல்ல எனவும், இதற்கு சமூக, பொருளாதார மற்றும் அரசியலே காரணம் எனவும் அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர் கர்தினால் Oscar Rodriguez Maradiaga கூறினார்.
“பசியற்ற வருங்காலம்” என்ற தலைப்பில் ஆஸ்ட்ரியாவின் வியன்னாவில் இம்மாதம் 1,2 தேதிகளில் அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் Maradiaga, உலகில் பசியால் வாடும் சுமார் 92 கோடியே 50 இலட்சம் மக்களின் பசியைப் போக்குவதற்கு உலக அளவில் தீர்வுகள் காணப்படுமாறு கேட்டுக் கொண்டார்.
பிரேசில் நாட்டு ரியோடி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும் ஐ.நா.மாநாட்டில், உணவுப் பாதுகாப்பு குறித்த விவகாரம் முக்கிய அங்கம் வகிக்க வேண்டுமென்றும், உலகின் பசியைப் போக்குவதற்கு உலகத்தலைவர்கள் நடவடிக்கை எடுக்குமாறும் காரித்தாஸ் தலைவர் அழைப்பு விடுத்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிகளைக் களைவதற்கு வளர்ச்சியடைந்த நாடுகள் தீவிரமாய் முயற்சித்து வரும்வேளை, சுமார் 100 கோடி மக்களுக்கான உணவுப் பாதுகாப்புக்கும் உலகின் பசியை அகற்றுவதற்கும் அந்நாடுகள் முயற்சி எடுக்குமாறும் கர்தினால் மாராதியாகா வலியுறுத்தியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.