2012-06-04 16:12:25

திருத்தந்தை-திருமணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் குடும்பம் உலகை மாற்ற முடியும்


முதல் குடும்பமாகிய தூய திருத்துவத்தின் தனித்தன்மை, திருஅவைச் சமூகங்களைக் குடும்பங்களாகக் கட்டியெழுப்ப அழைக்கின்றது. இந்தக் குடும்பங்கள் மூவொரு இறைவனின் அழகைச் சிந்தித்து, அதனை வார்த்தைகளால் அல்ல, மாறாக, அன்பை வாழ்வதில் “ஒளிக்கதிர்களாக” வெளிப்படுத்த அழைக்கின்றது. திருஅவை மட்டுமல்ல, ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடைபெறும் திருமணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் குடும்பமும், மூன்று ஆள்களாக இருக்கும் ஒரே கடவுளின் சாயலாகத் திகழ்வதற்கு அழைக்கப்படுகின்றது. திருமணமான அன்புத் தம்பதியரே, நீங்கள் உங்களது திருமணத்தை வாழும்போது ஒருவருக்கொருவர் ஏதோ குறிப்பிட்ட ஒருபொருளை அல்லது செயலை வழங்குவதில்லை, ஆனால் உங்களது முழுவாழ்வையுமே வழங்குகிறீர்கள். உங்களது ஆசைகள், ஒருவர் மற்றவர் விருப்பத்தை நிறைவேற்றல், கொடுப்பதிலும் பெறுவதிலும் நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி ஆகியவற்றால் உங்களது அன்பு, முதலும் முக்கியமுமாக உங்களுக்கே பயனுள்ளதாக இருக்கின்றது. உங்களது பிள்ளைகளைப் பொறுப்புடனும் தாராளமனத்துடனும் பெற்றெடுத்து அவர்களது நலனில் அக்கறை காட்டி ஞானம் நிறைந்த கல்வியை அளிப்பதிலும் இது பயன்மிக்கதாக இருக்கின்றது. மனிதரை மதித்தல், நன்றிமனப்பான்மை, நம்பிக்கை, பொறுப்பு, ஒத்துழைப்பு, ஒருமைப்பாடு போன்ற சமூகப் பண்புகளின் முதல் கல்விக்கூடமாகவும் குடும்ப வாழ்வு அமைந்துள்ளதாலும் இது பயனுள்ளதாக இருக்கின்றது. அன்புத் தம்பதியரே, தொழில்நுட்பத்தால் ஆக்ரமிக்கப்பட்ட இன்றைய உலகில் உங்களது பிள்ளைகள்மீது கண்ணும் கருத்துமாய் இருந்து, சலனமற்ற மனநிலை மற்றும் நம்பிக்கையோடு வாழ்வதற்கான அர்த்தங்களையும், விசுவாசத்தின் வல்லமையையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். உயர்ந்த இலட்சியங்களைச் சுட்டிக்காட்டி, அவர்களது பலவீனங்களில் அவர்களுக்கு ஆதரவாக இருங்கள். குடும்பங்களாக இருப்பதென்பது, கடவுள் உறவில் தொடர்ந்து நிலைத்திருந்து, திருஅவையின் வாழ்க்கையில் பங்கு கொள்வதாகும். அதாவது, உரையாடலை வளர்த்து, ஒருவர் ஒருவரின் கண்ணோட்டத்தை மதித்து, சேவை செய்வதற்குத் தயாராக இருந்து, பிறர் தவறும்போது பொறுமை காத்து, பிறரை மன்னித்து, மன்னிப்புக் கேட்டு, மோதல்கள் ஏற்படும்போது அறிவு மற்றும் பணிவால் அவற்றைச் சமாளித்து, பிற குடும்பங்களுக்குத் திறந்த மனதாக இருந்து, ஏழைகள்மீது அக்கறை காட்டி, சமுதாயத்தில் பொறுப்புள்ளவர்களாய் வாழ்வதாகும். திருமணமுறிவு பெற்றவர்கள் மற்றும் பிரிந்து வாழும் தம்பதியரையும் மறந்து விடாமல், அவர்களது போராட்டங்களில் திருத்தந்தையும் திருஅவையும் உடன் இருப்பதாகத் தெரிவித்தார். இவர்கள், குடும்பம் குறித்த திருஅவையின் போதனைகளை ஏற்றுக்கொண்டாலும், இந்தப் பிரிவுகளின் வேதனையான அனுபவத்தைக் கொண்டுள்ளார்கள். கடவுள் சாயலில் ஆண் மற்றும் பெண்ணாக இருப்பது என்பது, வேலை, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றின் வழியாக உலகை மாற்றுவதற்கு கடவுளோடு ஒத்துழைப்பதாகும். நவீனப் பொருளாதாரக் கொள்கைகளில் வேலை, உற்பத்தி மற்றும் சந்தை பற்றிய கருத்தியல், பயன்கருதியதாக இருக்கின்றது. ஆயினும், பயனீட்டுமுறை மற்றும் அதிகப்படியான இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட கூறுகள், நல்லிணக்கமான முன்னேற்றத்துக்கும், குடும்பத்தின் நலனுக்கும், நியாயமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கும் சாதமாக இல்லை என்பதைக் கடவுளின் திட்டமும் நமது அனுபவமும் காட்டுகின்றன. ஏனெனில் இவை அச்சமூட்டும் போட்டிகளின் எழுச்சியில் சமத்துவமின்மைகளையும், சுற்றுச்சூழல் அழிவையும், நுகர்வுப்பொருள்களில் போட்டியையும், குடும்பத்தில் பதட்டங்களையும் உருவாக்குகின்றன. உண்மையில் இந்தப் பயன்பாட்டு மனப்பான்மை, தனிப்பட்ட மற்றும் குடும்ப உறவுகளைப் பாதிக்கின்றது, உறுதியான சமூகத்தின் கட்டமைப்பை வலுவிழக்கச் செய்கின்றது, தனிப்பட்டவரின் ஆதாயத்தில் கவனம் குவிகின்றது. அதேபோல், கடவுள் சாயலில் மனிதர் இருப்பது, ஓய்வெடுக்கவும் கொண்டாடவும் அழைப்பு விடுக்கின்றது. கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஞாயிறு, விழா நாள், ஆண்டவரின் நாள், வார உயிர்ப்பு விழா நாள். இது திருஅவையின் நாள். இந்நாளில் திருஅவை சமூகம் கூடிவந்து, இன்று நாம் கொண்டாடுவதுபோல, நம் ஆண்டவரின் தியாகப்பலியை நிறைவேற்றி, திருவார்த்தையைக் கேட்டு, திருநற்கருணை விருந்தில் பங்குகொண்டு, அவரது அன்பில் நுழைந்து அவரது அன்பால் வாழும் நாளாகும். சேர்ந்து வாழ்வது, நட்பு, தோழமை, கலாச்சாரம், இயற்கையோடு நெருங்கியிருப்பது, விளையாடுவது ஆகியவற்றைக் கொண்ட மனிதரின் மற்றும் அவரது விழுமியங்களின் நாளாகும். இது குடும்பத்தின் நாளாகும். இந்நாளில் கூடுதல், கொண்டாடுதல், பகிர்தல், திருப்பலியில் பங்கெடுத்தல் ஆகியவற்றைக் குடும்பம் அனுபவிக்கும் நாளாகும். அன்புக் குடும்பங்களே, இந்நவீன உலகப்போக்கின் மத்தியில், நம் ஆண்டவரின் நாள் பற்றிய உணர்வை இழந்துவிடாதீர்கள். பாலைவனச் சோலையில் ஓய்வெடுத்து கடவுளைச் சந்திப்பதில் மகிழ்வு கண்டு அவர் மீதான தாகத்தைத் தணிப்பதற்கு ஏற்ற நாளாகும்., குடும்பம், வேலை, கொண்டாட்டம் ஆகிய கடவுளின் கொடைகளாகிய இந்த மூன்றும் நமது வாழ்க்கையில் ஒரு சமத்துவமான நிலைக்குக் கொண்டுவரப்படவேண்டும். குடும்பத்தின் தேவைகள், தாய்மைப்பேறு காலம், கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கு ஏற்றபடி வேலைநேரத்தை அமைத்தல் சமூகத்தைக் கட்டியெழுப்ப இன்றியமையாதவை. இதில், எப்பொழுதும், மனிதருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

திருமணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் குடும்பம், இந்த நவீன சமுதாயத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவர இயலும். உறுதியான குடும்பங்கள் உருவாகட்டும்.







All the contents on this site are copyrighted ©.