2012-06-04 15:37:20

குடும்ப மாநாட்டில் திருத்தந்தையின் உரை


ஜூன் 04, 2012. அடுத்த அனைத்துலக குடும்ப மாநாடு அமெரிக்க ஐக்கிய நாட்டு பிலடெல்ஃபியாவில் 2015ம் ஆண்டு நடைபெறும் என அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலியின் மிலான் நகரில் திருஅவையால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துலக குடும்ப மாநாட்டில் 150 நாடுகளிலிருந்து கலந்து கொண்ட சுமார் பத்து இலட்சம் விசுவாசிகளுக்கு நிறைவேற்றிய திருப்பலியின் இறுதியில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் குடும்ப மாநாடு 2015ல் பிலடெல்ஃபியாவில் இடம்பெறும் என்றார்.
மேலும், பெருந்துன்பங்களை அனுபவிக்கும் குடும்பங்களுடன் எப்பொழுதும் தோழமையுணர்வு கொண்டு வாழுமாறும், நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைக் குடும்பங்களுக்குப் பணக்காரக் குடும்பங்கள் உதவுமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
மனிதரை மதித்தல், நன்றிமனப்பான்மை, நம்பிக்கை, பொறுப்பு, ஒத்துழைப்பு, ஒருமைப்பாடு போன்ற சமூகப் பண்புகளின் முதல் கல்விக்கூடமாக குடும்ப வாழ்வு அமைந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரையாடலை வளர்த்து, ஒருவர் ஒருவரின் கண்ணோட்டத்தை மதித்து, சேவை செய்வதற்குத் தயாராக இருந்து, பிறர் தவறும்போது பொறுமை காத்து, பிறரை மன்னித்து, மன்னிப்புக் கேட்டு, மோதல்கள் ஏற்படும்போது அறிவு மற்றும் தாழ்மைப் பண்பால் அவற்றைச் சமாளித்து, பிற குடும்பங்களுக்குத் திறந்த மனதாக இருந்து, ஏழைகள்மீது அக்கறை காட்டி, சமுதாயத்தில் பொறுப்புள்ளவர்களாய் வாழ்வதன் தைவையையும் வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.