2012-06-02 14:59:32

புறக்கணிக்கப்பட்ட பாரம்பரிய உணவுப்பொருள்கள் உலகின் பசியைப் போக்குவதற்கு முக்கியமான சாதனங்கள் – ஐ.நா.


ஜூன்02,2012. உணவு உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் நகர்ப்புற மக்களால் புறக்கணிக்கப்படும் பாரம்பரிய உணவுப்பொருள்கள், உலகில் பசியையும் ஊட்டச்சத்தின்மைக் குறையையும் அகற்றுவதற்குப் போதுமானவை என்று ஐ.நா.அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் தாய்லாந்தில் நடத்திய இரண்டுநாள் கருத்தரங்கில் பேசிய, அந்நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பகுதிக்கானப் பிரதிநிதி Hiroyuki Konuma, 2050ம் ஆண்டில் உலக மக்கள்தொகை 900 கோடியை எட்டவுள்ளவேளை, உலகம், அனைவருக்கும் போதுமான உணவைத் தயாரிக்க இயலாமல் போகக்கூடும் என்று எச்சரித்தார்.
உணவுக்கும் மற்றும்பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் தாவர இனங்கள், உலகத் தாராளமயமாக்கலினால் சுமார் ஒரு இலட்சத்திலிருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
“ஏழையின் உணவு” என ஒதுக்கப்பட்டு குறைத்து மதிப்பிடப்படும் பழங்குடியினத்தவர் மற்றும் பாரம்பரிய உணவுப்பொருள்கள், உலகில் பசியாலும் ஊட்டச்சத்துக் குறைவாலும் துன்புறும் 92 கோடியே 50 இலட்சம் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று ஐ.நா.அதிகாரி கூறினார்.
இவ்வெண்ணிக்கையில் 60 விழுக்காட்டினர் ஆசிய-பசிபிக் பகுதியில் உள்ளனர்.
இந்தக் கருத்தரங்கில் 38 நாடுகளிலிருந்து அறிவியலாளரும் வல்லுனர்களும் கலந்து கொண்டனர். 12 விதமான உணவு அருங்காடசியகங்களும் வைக்கப்பட்டிருந்தன.








All the contents on this site are copyrighted ©.