2012-06-02 14:57:38

திருத்தந்தை : குருக்கள், இருபால் துறவியரின் அன்றாட வாழ்க்கையில் செபம் முக்கியம்


ஜூன்02,2012. அருட்பணியாளர்கள் மற்றும் இருபால் துறவிகளின் அன்றாட வாழ்க்கையில் செபத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஏழாவது குடும்ப மாநாட்டை சிறப்பிப்பதற்காக இத்தாலியின் மிலான் நகரத்திற்குச் சென்றுள்ள திருத்தந்தை, அருட்பணியாளர்கள் மற்றும் இருபால் துறவிகளை மிலான் பேராலயத்தில் இச்சனிக்கிழமை காலை சந்தித்து உரையாற்றிய போது இவ்வாறு கூறினார்.
கிறிஸ்துவின்மீது அன்பு கொண்டு வாழ்வது அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் முக்கியம் என்றாலும், கன்னிமை வாழ்வை ஏற்றுள்ள குருக்களுக்கும் துறவிகளுக்கும் இது தனிப்பட்ட விதத்தில் இன்றியமையாதது என்று கூறினார் திருத்தந்தை.
இச்சந்திப்புக்குப் பின்னர், உறுதிபூசுதல் திருவருட்சாதனத்தை அண்மையில் பெற்ற மற்றும் பெறவிருக்கும் இளம்வளர் பருவத்தினரைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இயேசுவின் நற்செய்திக்கு “ஆகட்டும்” என்று சொல்லி அதனை ஏற்றுக் கொண்டவர்கள் வாழ்க்கையில் தூயஆவியின் வியத்தகு வல்லமை எவ்வாறு செயல்படுகின்றது என்பது குறித்து எடுத்துச் சொன்னார்.
ஞானம், அறிவு, ஆலோசனை, உறுதி, விமரிசை, பக்தி, தெய்வபயம் ஆகிய தூயஆவியின் ஏழு கொடைகள் பற்றியும் விளக்கிய திருத்தந்தை, குருத்துவ மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வுக்குக் கிறிஸ்து அழைக்கும் போது அதற்குத் திறந்த மனத்துடன் பதில் சொல்லி அவரைப் பின்செல்லுங்கள் என்றும் இந்த இளம்வளர் பருவத்தினரைக் கேட்டுக் கொண்டார்.









All the contents on this site are copyrighted ©.