2012-06-01 16:08:32

அடுத்த பத்தாண்டுகளில் புலம் பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் – ஐ.நா.எச்சரிக்கை


ஜூன்01,2012. போர், இயற்கைப் பேரிடர்கள், வெப்பநிலை மாற்றம் போன்ற காரணிகளால் அடுத்த பத்து ஆண்டுகளில் உலக அளவில் புலம் பெயர்வோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கும் என்று, UNHCR என்ற ஐ.நா. அகதிகள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இவ்விவகாரம் குறித்து தீர்வு காண்பதற்கு பன்னாட்டு அளவில் ஒருமைப்பாடு தேவை என்பதையும் இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.
இவ்வறிக்கை தொடர்பாகப் பேசிய, UNHCR நிறுவனத் தலைவர் António Guterres, புலம் பெயர்வோர் குறித்த பிரச்சனைக்குத் தீர்வுகளை வெளியிடுவதைக் காட்டிலும், மக்களின் புலம் பெயர்வை உருவாக்குவதில் உலகம் வேகம் காட்டுகின்றது என்று குறை கூறினார்.
பெருமளவு மக்கள் பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் வாழ்கின்றனர், இவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பி வரமுடியாத நிலையிலே இருந்து, பின்னர் புலம் பெயர்ந்த நாடுகளிலேயே குடியேறிவிடுகின்றனர் அல்லது வேறு நாட்டுக்குச் செல்கின்றனர் என்று Guterres மேலும் கூறினார்.
உலக அளவில் இடம்பெறும் புலம் பெயர்வு ஒரு பன்னாட்டுப் பிரச்சனை, இதற்குப் பன்னாட்டு அளவில் அரசியல்ரீதியான தீர்வுகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
போர், இயற்கைப் பேரிடர்கள், வெப்பநிலை மாற்றம், மக்கள்தொகை பெருக்கம், உணவுப் பாதுகாப்பின்மை, நகர்ப்புறமாதல், தண்ணீர்ப் பற்றாக்குறை போன்ற காரணிகளால் தற்போது 4 கோடியே 30 இலட்சம் பேர் கட்டாயமாக தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர், இவர்களில் 80 விழுக்காட்டினர் வளர்ந்த நாடுகளில் குடியேறியுள்ளனர் என்றும் ஐ.நா.அறிக்கை கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.