2012-05-31 15:52:47

மனிதர்களை விட தக்காளியில் 7000 மரபணுக்கள் அதிகம்


மே,31,2012. மனிதர்களில் உள்ள மரபணுக்களைவிட தக்காளியில் அதிக அளவு மரபணுக்கள் உள்ளதாக அறிவியல் ஆய்வு ஒன்று கூறுகிறது.
மனிதர்களைவிட 7000 மரபணுக்கள் அதிகமாக, 31,760 மரபணுக்களைக் கொண்ட தக்காளியின் மரபணு வரைபடத்தைப் பற்றிய ஓர் ஆய்வை கடந்த ஒன்பது ஆண்டுகளாக 14 நாடுகளில் மேற்கொண்ட ஓர் ஆய்வுக் குழுவினர் தங்கள் கண்டுபிடிப்புக்களை Nature என்ற ஓர் அறிவியல் ஆய்வு இதழில் வெளியிட்டுள்ளனர்.
இந்த மரபணுக்களின் வரைபடத்தை சரிவரப் புரிந்துகொண்டால் மரபணு மாற்றங்கள் செய்யாமலேயே மிக அதிக அளவு தக்காளி வகைகளை உருவாக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பல்பொருள் அங்காடிகளில் வைக்கப்பட்டுள்ள தக்காளி வகைகள் அதிகம் பழுத்து, அழுகிவிடாமல் நீண்டகாலம் நீடிக்கவேண்டும் என்பதற்காக அவற்றின் மரபணுக்களை மாற்றம் செய்வது தற்போதைய வழக்கம். இந்த மரபணு மாற்றங்களால் தக்காளியில் உள்ள இயற்கை மணம் இல்லாமல் போய்விடுகிறது என்ற குறை எழுந்துள்ளது.
இந்த மரபணு வரைபடத்தின் நுணுக்கங்களைச் சரிவர ஆய்வு செய்தால், இந்த மரபணு மாற்றங்கள் இல்லாமல், பலவிதமான தக்காளியை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.