2012-05-31 15:52:30

2008ம் ஆண்டிலிருந்து உலகம் சந்தித்து வரும் பொருளாதாரச் சரிவின் அதிகமான தாக்கத்தை இளையோரே அனுபவிக்கின்றனர்


மே,31,2012. இளையோருக்குச் சரியான வழியில் எதிர்காலத்தை அமைத்துத் தர இன்றைய சமுதாயம் தவறிவிட்டது என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ILO எனப்படும் உலக உழைப்பாளர் நிறுவனத்தின் 101வது அமர்வு இப்புதனன்று ஜெனீவாவில் துவங்கியது. வருகிற ஜூன் மாதம் 15ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கருத்தரங்கில் ILOவின் உறுப்பினர்களாக உள்ள 185 நாடுகளின் பிரதிநிதிகளாக 5000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கருத்தரங்கின் முதல் அமர்வில் உரையாற்றிய ILOவின் இயக்குனர் Juan Somavia, வேலைகள் இல்லாமல் நம்பிக்கை இழந்து வரும் இளையோரைத் தன் உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
2008ம் ஆண்டிலிருந்து உலகம் சந்தித்து வரும் பொருளாதாரச் சரிவின் அதிகமான தாக்கத்தை இளையோரே அனுபவிக்கின்றனர் என்பதை எடுத்துரைத்த ILO இயக்குனர், இந்நிலையை சரி செய்ய வேண்டுமெனில், ஒவ்வோர் ஆண்டும் இவ்வுலகில் 5 கோடி புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்.
இளையோரை மையப்படுத்தி நடத்தப்படும் இக்கருத்தரங்கிற்கு முன்னதாக, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஜெனீவா வந்திருந்த 5000 இளையோருடன் ILO 46 அமர்வுகள் நடத்தி, இளையோரின் எண்ணங்களை அறிந்துள்ளது என்று ஐ.நா.வின் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
அண்மையில் மியான்மார் தேர்தலில் வெற்றிபெற்ற எதிர் கட்சித் தலைவர் ASS இக்கருத்தரங்கில் ஜூன் 14ம் தேதி உரையாற்றுவார் என்று ஐ.நா. அறிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.