2012-05-30 16:06:09

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 29ம் தேதி ஐ.நா. அமைதி காப்பாளர்களின் உலக நாள்


மே,30,2012. 2011ம் ஆண்டு ஐ.நா.வின் அமைதி காக்கும் முயற்சிகளின் விளைவாகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ள வீர நாயகர்களை நான் வணங்குகிறேன் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
பிரச்சனைகளால் சூழப்பட்டுள்ள உலகில் அமைதியை நிலைநாட்ட ஐ.நா. அமைதிப் படையினர் மேற்கொண்ட முயற்சிகளில் 2011ம் ஆண்டு 112 பேர் உயிர் இழந்துள்ளனர். இவர்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் இச்செவ்வாயன்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
ஐ.நா. அமைதி காப்பாளர்களின் உலக நாள் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 29ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, நியூயார்க்கில் நடைபெற்ற விழாவில் அமைதி காக்கும் முயற்சியில் உயிரிழந்த ஐ.நா. வீரகளுக்கு மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
உலகெங்கும் போர்ச்சூழல் அதிகமாக உள்ள நாடுகளில் 1,20,000க்கும் அதிகமான வீரர்கள் ஐ.நா. அமைதி காப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர். இவர்களில் 112 பேர் 2011ம் ஆண்டு உயிரிழந்துள்ளனர். நடப்பு ஆண்டில் இதுவரை 31 பேர் அமைதி காக்கும் முயற்சிகளில் உயிரிழந்துள்ளனர் என்று ஐ.நா. செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மனிதர்கள் அனைவருமே அமைதி முயற்சிகளுக்கு மீண்டும் தங்களையே அர்ப்பணிப்பது ஒன்றே உயிர் நீத்த இந்த வீரர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை என்று ஐ.நா. உயர் அதிகாரி Hervé Ladsous கூறினார்.








All the contents on this site are copyrighted ©.