2012-05-30 16:07:06

இயேசு சபை அருள்தந்தை Ceyrac Pierre இறையடி சேர்ந்தார்


மே,30,2012. இந்தியாவிலும், கம்போடியா உட்பட்ட ஆசியாவின் பிற நாடுகளிலும் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்த இயேசு சபை அருள்தந்தை Ceyrac Pierre தனது 98வது வயதில், இப்புதன் அதிகாலை இறையடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
1914ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி பிரான்ஸ் நாட்டில் பிறந்த அருள்தந்தை சிராக், தனது 17வது வயதில் இயேசு சபையில் சேர்ந்து, 22வது வயதில் இந்திய மண்ணில் பணிபுரிய வந்தார்.
தமிழில் கல்லூரிப் படைப்பை மேற்கொண்ட அருள்தந்தை சிராக், தனது 31வது வயதில் குருவாகத் திருநிலைபடுத்தப்பட்டு, கல்லூரி மாணவரிடையே தன் பணிகளைத் துவங்கினார்.
பல்கலைக் கழக மாணவர்களை சமுதாயச் சிந்தனைகளில் வளர்க்கும் ஒரு முயற்சியாக விளங்கும் AICUF என்ற மாணவ அமைப்பை உருவாக்கிய அருள்தந்தை சிராக், அவ்வமைப்பை 15 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தினார்.
போர்களால் சீர்குலைந்திருந்த கம்போடியாவில் புலம்பெயர்ந்தோரிடையே பல ஆண்டுகள் உழைத்த அருள்தந்தை சிராக், மீண்டும் இந்தியா திரும்பி, தமிழ் நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிணறுகள் தோண்டுதல், வேளாண்மை வாய்ப்புக்களை உருவாக்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டார்.
தன் வாழ்வின் இறுதி பல ஆண்டுகள் தமிழ் நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான ஏழை குழந்தைகளுக்குத் தன் பணியை அர்ப்பணித்த அருள்தந்தை, குழைந்தைகள் காப்பகம், சமுதாயக் கல்லூரி (Community College) இவற்றை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினார்.
‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல், வேறொன்று அறியேன் பராபரமே..’ என்ற தாயுமானவரின் வார்த்தைகளைத் தன் விருதுவாக்காகக் கொண்டு வாழ்ந்த அருள்தந்தை சிராக் அவர்களின் சமுதாயப் பணிகளைப் பாராட்டி பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய அரசு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.








All the contents on this site are copyrighted ©.