2012-05-29 15:25:59

மன்னார் ஆயருக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசு கண்டனம்


மே29,2012. மதங்களைக் கடந்து மனிதநேயத்தின் அடிப்படையில், மக்களின் நீதிக்காக குரல் கொடுத்து வரும் மன்னார் மறைமாவட்ட ஆயர் மீது, இலங்கை அரசு மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் மேற்கொண்டு வரும் தொடர் அச்சுறுத்தல்களுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
ஆயர் இராயப்பு ஜோசப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும், அவர் மீதான அச்சுறுத்தல்களைக் கண்டித்தும் மன்னார் புனித செபஸ்தியார் ஆலயத்தில் இடம்பெற்ற கூட்டத்திற்கு வலுவூட்டும் வகையில், நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வழங்கிய வானொலி உரையில், போர் இடம்பெற்ற காலங்களிலும், தொடர்ந்து மனிதநேய நெருக்கடி மிகுந்த கட்டங்களிலும், மிகுந்த துணிச்சலுடன் கிறிஸ்தவ மத விழுமியங்களுடன், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆயர் இராயப்பு ஜோசப் குரல் கொடுத்தது மட்டுமல்ல, இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக அப்பாவித் தமிழ் மக்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் நீதிவேண்டி சாட்சியம் அளித்தவர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒரே காரணத்தை முன்வைத்து, அவரின் தனித்துவத்தையும் நன்மதிப்பையும் புறந்தள்ளி, இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்துவதிலும், பாராளுமன்றத்தில் பொறுப்பற்று விமர்சிப்பதும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் திட்டமிட்ட செயற்பாடுகளாகும் எனக்கூறும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், இத்தகையச் செயல்கள் யாவற்றினையும் நாடுகடந்த தமிழீழ அரசு மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது என மேலும் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.