2012-05-29 15:25:00

எகிப்தில் முஸ்லீம் சகோதரத்துவ கட்சியின் வெற்றி குறித்து ஆயர் கவலை


மே29,2012. எகிப்தில் அரசுத்தலைவர் தேர்தல்களில் முஸ்லீம் சகோதரத்துவ கட்சி வெற்றி பெற்றால் கிறிஸ்தவர்களின் வருங்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும் என்று அந்நாட்டு காப்டிக் கத்தோலிக்க ஆயர் Antonios Aziz Mina கவலை தெரிவித்தார்.
முஸ்லீம் சகோதரத்துவ கட்சியினர், இன்று ஒன்றைச் சொல்வார்கள், மறுநாள் வேறு ஒன்றைச் செய்வார்கள், அவர்கள் தங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றமாட்டார்கள், இதுதான் பிரச்சனை என்று Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் ஆயர் Aziz Mina.
இம்மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காததால், அடுத்த சுற்றுத் தேர்தல் வருகிற ஜூன் 16 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலில் முஸ்லீம் சகோதரத்துவ கட்சி வேட்பாளர் Mohamed Morsi ம் முன்னாள் பிரதமர் Ahmed Shafik ம் போட்டியிடவுள்ளனர்.
இத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த ஆயர் Aziz Mina, அரசுத்தலைவருக்குப் போட்டியிடும் வேட்பாளர் எல்லா மதத்தவரின் சுதந்திரத்தையும் மதிக்கக்கூடியவராக இருக்க வேண்டும் எனவும், சுதந்திரத்திற்கும் சனநாயகத்திற்கும் எகிப்தின் சிறந்த அரசியல் அமைப்புக்கும் உறுதியளிக்கும் வேட்பாளருக்கே தாங்கள் ஓட்டளிக்கவிருப்பதாகவும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.