2012-05-26 15:33:09

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 உயிர்ப்புப் பெருவிழா முடிந்து ஐம்பதாம் நாளான இன்று பெந்தகோஸ்து எனப்படும் தூய ஆவியாரின் பெருவிழா. பெந்தகோஸ்து என்ற சொல்லுக்கு ‘ஐம்பதாம் நாள்’ என்று பொருள். இந்த ஐம்பது நாட்களில் தொடர்ந்து பல விழா நாட்கள் வந்துள்ளன. உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, இறை இரக்கத்தின் ஞாயிறு, அதற்குப் பின் நல்லாயன் ஞாயிறு சென்ற வாரம் விண்ணேற்றப் பெருவிழா இந்த ஞாயிறு தூய அவியாரின் பெருவிழா என்று நாம் கொண்டாடி மகிழ வரிசையாக பல ஞாயிறுகள் நமக்குக் கிடைத்துள்ளன. இனிவரும் நாட்களிலும் மூவொரு இறைவனின் திருவிழா, கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா, கிறிஸ்துவின் திரு இருதயத் திருவிழா என்று விழாக்களும் கொண்டாட்டங்களும் தொடரும். ஒவ்வொரு விழாவையும் கொண்டாடினோம் அல்லது கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது, எதைக் கொண்டாடுகிறோம், எப்படி கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன்முதலில் நிகழ்ந்தபோது, எக்காளம் ஒலிக்க, வாண வேடிக்கைகள் கண்ணைப் பறிக்க இம்மறையுண்மைகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி நடந்ததாகத் தெரியவில்லையே! மாறாக, இந்த ஒவ்வொரு நிகழ்வும் முதன் முதலில் நடந்தபோது, அதிகமான ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல், அமைதியாய் நடந்தன.
எப்போது, எப்படி நடந்ததென்றே தெரியாமல் அமைதியாக நிகழ்ந்த ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம் விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப்பார்க்கும் தூய ஆவியாரின் விழாவும் மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. அந்த மேலறை அனுபவத்திற்குப் பின், எருசலேமில் இருந்தோர் பலருக்கு இந்தப் பெருவிழாவின் தாக்கம் வெளிப்பட்டது என்று இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள்.

இன்றைய உலக வழக்கின்படி விழாக்கள் எப்படி கொண்டாடப்படவேண்டும் என்ற இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. கொண்டாட்டம் எதற்காக என்பதை விட கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தே இந்த விழாக்களின் முக்கியத்துவம் பிறருக்குத் தெரியவரும். பகட்டு, பிரமிப்பு, பிரம்மாண்டம் இவைகளே விழாக்களின் உயிர்நாடிகளாய் உள்ளன. இந்த விழாக்கள் எதற்காக கொண்டாடப்பட்டன என்று அடுத்த நாள் கேட்டால்கூட நமக்கு ஒன்றும் நினைவிருக்காது. அல்லது, அவர்கள் செய்த ஆர்ப்பாட்டமே நமது நினைவில் நிறைந்து, நமக்கு எரிச்சலூட்டும். உலகக் கொண்டாட்டங்களின் இலக்கணம் இது.

கொண்டாட்டம் என்ற சொல்லுக்கே புது இலக்கணம் தந்து, நமக்குப் பாடங்களையும் சொல்லித்தந்தனர் இயேசுவும் அவரது சீடர்களும். கொண்டாட்டம் என்பது எப்போதும் பிறரது கவனத்தை ஈர்ப்பதிலேயே அமையவேண்டும் என்று இல்லை. நாம் கொண்டாடும் விழாவின் உள்அர்த்தம் எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில் நம் கவனம் இருக்க வேண்டும். இவ்விதம் கொண்டாடப்படும் விழாக்கள் ஒருநாள் கேளிக்கைகளாக இல்லாமல், வாழ்நாளெல்லாம் நம்முள் மாற்றங்களை உருவாக்கும் கருவிகளாக அமையும். உள்ளத்தின் ஆழத்தில் நிறைவைத் தரும் மகிழ்வாக நம்முடன் தங்கும்.
இந்தப் பாடங்களை நமக்குச் சொல்லித்தந்த விழாக்கள் - இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய விழாக்கள். இருபது நூற்றாண்டுகள் ஆகியும், இந்த விழாக்களில் நாம் புதுப்புது அர்த்தங்களைக் காண்பதற்குக் காரணம்?... இவை முதல்முறை கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் ஆழமான அர்த்தங்கள் விதைக்கப்பட்டன. இன்று அந்த விதைகள் வேரூன்றி வளர்ந்து தொடர்ந்து கனிகளைத் தந்தவண்ணம் உள்ளன.

இன்று நாம் ஒரு பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். ஆம்... தூய ஆவியாரின் பெருவிழாவை நாம் திருஅவை பிறந்தநாள் என்றும் அழைக்கிறோம். ஒவ்வொரு குழந்தையும் இவ்வுலகில் பிறக்கும்போது, அக்குழந்தையைப் பற்றிய எதிர்பார்ப்புக்கள் இருக்கும். திருஅவை என்ற குழந்தை பிறந்தபோதும் பல எதிர்பார்ப்புக்கள் இருந்தன. திருஅவை என்ற குழந்தை பிறந்த விதம், பிறந்ததும் அக்குழந்தையிடம் வெளிப்பட்ட குணம் இவற்றை நாம் சிந்திப்பது பயனளிக்கும்.
திருஅவை என்ற குழந்தை பிறந்தது ஒரு குழுவில், ஒரு குடும்பத்தில். தூய ஆவியார் தீ நாக்குகளாய் இறங்கிவந்த அனுபவம் தனியொரு மனிதருக்கு காட்டின் நடுவில், அல்லது மலை உச்சியில் ஏற்பட்ட ஓர் அனுபவம் அல்ல. செபத்தில் இணைந்திருந்த சீடர்கள் நடுவில் நெருப்பு நாவுகள் வடிவில் தூய ஆவியார் இறங்கி வந்தபோது, திருஅவை பிறந்தது.

பொதுவாக, ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் ஒருவருக்கு இறை அனுபவம் கிடைக்கும் என்று ஏறத்தாழ எல்லா மதங்களும் சொல்கின்றன. கிறிஸ்தவத் திருமறையில் தனிப்பட்ட இந்த அனுபவத்துடன் நாம் நின்றுவிடுவதில்லை. குழுவாய், குடும்பமாய் நாம் இணைந்து வரும்போதும் ஆழ்ந்த இறை அனுபவம் உருவாகிறது என்பதைத் திருஅவையின் பிறந்தநாள் நமக்குச் சொல்லித் தருகிறது.

அர்த்தமுள்ள வகையில் மனிதர்கள் இணைந்து வருவதைத் தடுக்கும் வழிகள் இன்று உலகில் பெருகி வருகின்றன. அப்படியே நாம் இணைந்து வருவது வெறும் பொழுதுபோக்கும் செயல் என்ற எண்ணமும் பெருகி வருகின்றது. பொதுவாகவே, நாம் வாழும் இன்றைய உலகம் நம் ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, அந்தத் தனிமையில் நாம் நிறைவைக் காண முடியும் என்ற மாயையை உருவாக்கி வருகிறது. நம்மைச்சுற்றி வளர்ந்துள்ள தொடர்புசாதனக் கருவிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆனால், அதே வேளையில் இந்தக் கருவிகள் நம்மை உண்மையிலேயே இணைக்கின்றனவா? அல்லது இந்தக் கருவிகளின் தோழமையில் நாம் மனித உறவுகளை, தொடர்புகளை இழந்து வருகிறோமா என்ற கேள்விகள் எழுகின்றன. நம்மைச் சுற்றி தொடர்புசாதனக் கருவிகளைப் பெருக்கிக் கொண்டால், நாம் ஒவ்வொருவரும் தனித் தனி கோட்டைகள் கட்டிக்கொண்டு அங்கேயே தங்கி விட முடியும். இக்கோட்டைகளிலிருந்து கருவிகள் மூலம் பிறரைப் பார்க்க முடியும், பேச முடியும். தொடவும் முடியும்.... ஆனால், இவை அனைத்தும் கருவிகளின் துணையுடன் மட்டுமே நிகழும் அனுபவங்கள். கருவிகள் இல்லாமல் தொடர்புகள் இல்லை என்ற அளவு கருவிகளின் ஆக்கிரமிப்பு வளர்ந்துவிட்ட இந்தக் காலக் கட்டத்தில் தூய ஆவியாரின் பெருவிழா, திருஅவை என்ற குழந்தை பிறந்த நாள் நமக்குச் சொல்லித் தரும் பாடம் இதுதான்: திருஅவை என்பது ஒவ்வொருவரும் தனித்து உணரும் கற்பனை அனுபவம் அல்ல; குழுவாக, குடும்பமாக நாம் உணரும் ஓர் அனுபவமே திருஅவை.

திருஅவை என்ற குழந்தை பிறந்ததும், அக்குழந்தையிடம் வெளிப்பட்ட குணம் என்ன? திருத்தூதர் பணிகள் நூலில் நாம் வாசிக்கும் வரிகள் இவை: "அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்." (திருத்தூதர் பணிகள் 2: 4) திருஅவை என்ற குழந்தை பிறந்ததும் பேசத் துவங்கியது; அதுவும், பல்வேறு மொழிகளில் பேசத் துவங்கியது. இக்குழந்தை பிறந்ததும் எருசலேம் நகரில் நிகழ்ந்ததைத் திருத்தூதர் பணிகள் இவ்வாறு சொல்கிறது:

திருத்தூதர் பணிகள் 2: 5-11
அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லோரும் மலைத்துப்போய், “இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி?” என வியந்தனர். பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே! என்றனர்.

பேசியது கலிலேயர்கள்... அவர்கள் பேசியது... கடவுளின் மாபெரும் செயல்கள். பேசும் மொழி எதுவாக இருந்தாலும், கடவுளைப் பற்றி, அவரது செயல்களைப் பற்றிப் பேசும்போது மொழி என்ற குறுகிய எல்லைகள் கரைந்து விடுகின்றன. மொழி என்பது வெறும் வாய் வார்த்தைகள் அல்ல, வெறும் சொல்திறமையால் மட்டும் பேசிவிட முடியாது. அதையும் கடந்து உள்ளங்கள் பேசும்போது மொழி தேவையும் இல்லை என்பதை நாம் அறிவோம்.

தூய ஆவியாரின் வருகையால் பிறந்த திருஅவை, பிறந்ததும் உலகிற்குச் சொல்லித் தந்த அழகான பாடங்களில் ஒன்று... மனித இதயங்கள் இணைந்து வரும்போது, மனிதர்கள் உருவாக்கிய மொழி என்ற எல்லை தேவையில்லை. அதுவும், நம் இதயங்கள் இணைந்து பேசுவது இறைவனின் அருஞ்செயல்கள் என்றால், அங்கு மொழியே தேவையில்லை என்பதையும் தூய ஆவியாரின் பெருவிழா நமக்கு உணர்த்துகிறது.
தூய ஆவியாரால் மனித குலம் ஆட்கொள்ளப்பட்டால் அங்கு உருவாகும் அழகிய வாழ்வைத் திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் விவரிக்கிறார். தூய ஆவியாரின் பெருவிழா வெறும் ஒருநாள் கொண்டாட்டமாக இல்லாமல், நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கும் ஓர் ஆழ்ந்த அனுபவமாக மாறுவதற்கு அந்த ஆவியாரின் கொடைகளை, கனிகளை நாம் பெற வேண்டும். இந்த எண்ணங்களைக் கூறும் பவுல் அடியாரின் சொற்களோடு நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம்:

கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5 : 16, 22-23, 25
தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்: தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும்... தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.








All the contents on this site are copyrighted ©.