2012-05-25 15:33:26

வன்முறைகளுக்கு மத்தியில் எதிர்காலத்தைப் பற்றி பெண்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை மனித குலத்திற்கு ஒரு பாடம் - கர்தினால் Vegliò


மே,25,2012. புலம் பெயர்ந்தோரில் பெண்கள் அதிக வன்முறைகளுக்குப் பலியாகின்றனர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் திருப்பீடத் தூதரகம் புலம் பெயர்ந்தோரின் பிரச்சனைகளை மையப்படுத்தி உரோம் நகரில் இவ்வியாழனன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில், புலம்பெயர்ந்தோர், பயணிகள் ஆகியோருக்குப் பணிபுரியும் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
"வாய்ப்புகளுக்கான பாலங்களை உருவாக்குதல்: பெண்களும் புலம்பெர்யர்தலும்" என்ற தலைப்பில் அமைந்திருந்த கர்தினால் Vegliòவின் உரையில், கட்டாயமாகப் புலம்பெயரும் நிலைக்குத் தள்ளப்படும் மக்களிடையே, பெண்கள் அதிக வன்முறைகளுக்குள்ளாவதால், ஆழமான உள்மனக் காயங்களை அவர்கள் வாழ்வு முழுவதும் சுமக்க வேண்டியுள்ளது என்று எடுத்துரைத்தார்.
பாலியல் வன்முறை என்பது போர்களில் பயன்படுத்தப்படும் ஒரு வன்முறைத் திட்டமாக உருவெடுத்துள்ளது என்ற ஆபத்தைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Vegliò, 'குலங்களைச் சுத்தமாக்குதல்' (‘ethnic cleansing’) என்ற ஒரு தவறான எண்ணத்தால் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை வலியுறுத்தினார்.
மனித வர்த்தகத்தில் பெருமளவில் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதையும் எடுத்துரைத்த கர்தினால் Vegliò, இத்தனை வன்முறைகளுக்கும் மத்தியில் பெண்கள் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை கொண்டிருப்பது மனித குலத்திற்கு ஒரு பாடமாக அமைகிறது என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.