2012-05-25 15:34:26

மன்னாரில் கத்தோலிக்க அருட்பணியாளர்களுக்கு காவல்துறை நெருக்கடி


மே25,2012. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வேலைவாய்ப்பு, நிலஅபகரிப்பு போன்றவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் நோக்கத்திலும், மன்னார் ஆயருக்கு எதிராக அமைச்சர் ஒருவர் தெரிவித்த தேவையற்ற குற்றச்சாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மன்னார் மறைமாவட்ட குருக்கள் எதிர்ப்பு நிகழ்வொன்றை இஞ்ஞாயிறன்று நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், மன்னார் கத்தோலிக்க குருகுல முதல்வர் உட்பட ஐந்து அருட்பணியாளர்களை மன்னார் நீதிமன்றத்தின் விசாரணைக்குச் செல்லுமாறு அவசரகால காவல்துறை ஆணை பிறப்பித்துள்ளது என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
மன்னார் ஆயர் ஜோசப் ராயப்பு, ஏற்கனவே இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அமைச்சர் ரிசாட் பதியுதீனால் தேவையற்ற விதத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
மன்னாரிலிருந்து தலைமன்னார்க்குச் செல்லும் முக்கிய சாலையில் உள்ள கட்டுக்காரன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள மன்னார் ஆயர் இல்லம் மற்றும் அப்பகுதி மக்களுக்குச் சொந்தமான சுமார் 600 ஏக்கர் நிலத்தை இந்த அமைச்சரின் சகோதரர் ஒருவர் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததும் அண்மையில் செய்தியாக வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நில அபகரிப்பு தொடர்பாக மன்னார் ஆயர் உள்ளிட்ட அக்கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தலைமன்னார் காவல்துறையில் புகார் செய்திருந்தனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.








All the contents on this site are copyrighted ©.