2012-05-24 16:02:19

போலியோ நோயைத் தடுப்பதற்கு அவசரகாலத் திட்டம்


மே24,2012. போலியோ நோய்ப் பாதிப்பு இல்லாமல் இருந்த நாடுகளில் மீண்டும் அந்நோய்ப் பாதிக்கத் தொடங்கியிருப்பதால், இந்நோயைத் தடுப்பதற்கு உலக அளவில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று WHO எனும் உலக நலவாழ்வு நிறுவனம் விரைவில் உலகினரை வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது ஆப்ரிக்கா, தாஜிக்கிஸ்தான், சீனா ஆகிய பகுதிகளில் போலியோ நோய்க்கிருமிகள் பரவத் தொடங்கியிருப்பதாக WHO கூறியது.
நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போலியோ நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டுமென்றும் WHO நிறுவனம் கேட்டுள்ளது.
தகுந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில், பத்தாண்டுக்குள், ஒவ்வோர் ஆண்டும் உலகில் சுமார் 2 இலட்சம் சிறார் வாதநோயாளிகளாகிவிடுவார்கள் என்று இந்நிறுவன உறுப்பினர்கள் ஜெனீவா கூட்டத்தில் எச்சரித்தனர்.
போலியோ நோய் அச்சுறுத்தல் அதிகமாக இருந்த நாடுகளில் ஒன்றான இந்தியா, கடந்த பிப்ரவரியிலிருந்து அந்நோய்ப் பாதிப்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.