2012-05-24 16:02:43

திருத்தந்தை : கடவுளும் காயப்பட்ட ஐரோப்பாவும்


மே24,2012. அன்றாட வாழ்விலிருந்து கடவுளை ஒதுக்கி வைத்தால் மனித மாண்பும் நீதியும் சுதந்திரமும் மலராது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்தாலிய ஆயர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அவ்வுரையின் இறுதியில் தூய ஆவியிடம் செபித்த போது, கடவுளை ஒதுக்கி வாழும் போது அது இடர்களுக்கே இட்டுச்செல்லும் என்பதை சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும், மனித மாண்பும் சுதந்திரமும் மலர்ந்தால்தான் ஒரு சமுதாயத்தை நீதியில் சமைக்க முடியும் என்பதை மனித சமுதாயத்துக்கு உணர்த்தும் என்று வேண்டினார்.
ஐரோப்பாவில் சமய நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக திருப்பலிக்குச் செல்வோர் மற்றும் ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதை நிவர்த்தி செய்ய வேண்டுமெனில், காயப்பட்ட ஐரோப்பாவில் கடவுள் பற்றி அறிவித்து அவரைக் கொண்டாட வேண்டும், அவருக்குச் சான்று பகர வேண்டுமெனக் கேட்டுள்ளார் திருத்தந்தை.
கடவுள் அறியப்படாதவராக நோக்கப்பட்டு, இயேசு ஒரு வரலாற்று நாயகன் என்ற நிலையில் மட்டும் பார்க்கப்படும் போக்கு நிலவும் இக்காலத்தில் ஆழமான இறையனுபவம் பெற்ற மனிதரின் வாழ்க்கையினால் மட்டுமே மக்கள் கிறிஸ்துவிடம் ஈர்ப்பைப் பெறுவார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
நமது பற்றுறுதி மற்றும் செபத்தின் தன்மையைப் புதுப்பிக்காவிட்டால் மறைபோதகப் பணியில் மறுமலர்ச்சி இருக்காது என்றும் திருத்தந்தை கூறினார்.








All the contents on this site are copyrighted ©.