2012-05-24 16:03:12

ஏழைக் குடும்பங்களுடன் திருத்தந்தை மதிய உணவு


மே24,2012. இத்தாலியின் மிலான் நகரில் இம்மாதம் 30 முதல் ஜூன் 3 வரை நடைபெறும் ஏழாவது அனைத்துலக குடும்ப மாநாட்டிற்குச் செல்லும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தேவையில் இருக்கும் குடும்பங்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வையும் விருந்தோம்பல் பண்பையும் தெரிவிப்பார் என்று மிலான் பேராயர் கர்தினால் ஆஞ்சலோ ஸ்கோலா அறிவித்தார்.
இவ்வுலக மாநாடு நிறைவடையும் ஜூன் 3ம் தேதியன்று சுமார் நூறு குடும்பங்களின் 300 உறுப்பினர்களுடன் திருத்தந்தை மதிய உணவு அருந்துவார் என்று கர்தினால் ஸ்கோலா நிருபர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளோர், அரசியல்ரீதியான அகதிகள், குடியேற்றதாரர், வயதான தம்பதியர் ஆகியோர் இந்த மதிய உணவுக்கெனத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவ்வுலக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு நிதிப்பற்றாக்குறையை எதிர்நோக்கும் வெளிநாட்டவர்க்கு உதவும் நோக்கத்தில், “மிலான் குடும்பங்கள் 2012” என்ற அமைப்பும் மூன்று மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு இதுவரை சுமார் ஐம்பதாயிரம் யூரோக்களைத் திரட்டியிருப்பதாகவும் நிருபர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
குடும்பங்களைக் கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதிப்படுத்தும் நோக்கத்தில் நடைபெறவிருக்கும் இவ்வுலக மாநாட்டில் 27 நாடுகளைச் சேர்ந்த 104 பேர் உரையாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.