2012-05-23 15:48:13

விளையாட்டு வீரர்கள் தங்கள் மத நம்பிக்கையை வெளிப்படையாகப் பறைசாற்றுவதைத் திருத்தந்தை எப்போதும் பாராட்டியுள்ளார்


மே,23,2012. இளையோரின் எடுத்துக்காட்டுகளாய் விளங்கும் விளையாட்டு வீரர்கள் தங்கள் மத நம்பிக்கையை வெளிப்படையாகப் பறைசாற்றுவதைத் திருத்தந்தையும், திருஅவைத் தலைவர்களும் எப்போதும் பாராட்டியுள்ளனர் என்று திருப்பீட அலுவலர் அருள்தந்தை Kevin Lixey கூறினார்.
ஐரோப்பிய கால்பந்தாட்டக் குழுக்களிடையே நடைபெற்ற போட்டியில் அண்மையில் கோப்பையை வென்ற Chelsea என்ற அணியின் Didier Drogba என்ற கத்தோலிக்க விளையாட்டு வீரர், தங்கள் அணியின் வெற்றிக்கு இறைவனே காரணம் என்று வெளிப்படையாகக் கூறியதைத் தொடர்ந்து, அருள்தந்தை Lixey இவ்வாறு சொன்னார்.
34 வயதான Drogba ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்தவர். இவரது முயற்சியால் Chelsea அணி இந்தக் கோப்பையைக் கைப்பற்றியதும், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியொன்றில் கடவுள் மிக நல்லவர் என்று கூறினார்.
உலகில் ஆழ்ந்த பாதிப்புக்களை உருவாக்கிய 100 பேர் என்று Time வார இதழ் கடந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள கால்பந்தாட்ட வீரர் Drogba, உளநாட்டுப் போரினால துன்புற்றுவரும் ஐவரி கோஸ்ட் நாட்டில் அமைதியை நிலைநாட்ட உருவாக்கப்பட்டுள்ள 11 பேர் அடங்கிய குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராகச் செயலாற்றுகிறார்.
இவர் Chelsea அணியில் சேருவதற்கு முன் பிரான்ஸ் நாட்டின் ஓர் அணியில் விளையாடி வந்தவர். அவ்வணியில் பயன்படுத்தியச் சீருடையை அவர் வாழ்ந்த பகுதியில் உள்ள ஒரு பேராலயத்திற்குப் பரிசாக வழங்கினார் என்று CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.