2012-05-23 15:46:40

மணமுறிவுக்கு வழி வகுக்கும் உலகம், அந்த உறவைக் காக்கும் வழிகளைத் தேடவும் கடமைப்பட்டுள்ளது - கர்தினால் Ennio Antonelli


மே,23,2012. மிகக் குறுகிய கால மணவாழ்வுக்குப் பின் மணமுறிவுக்கு வழி வகுக்கும் உலகம், அந்த உறவைக் காத்து வளர்க்கும் வழிகளைத் தேடவும் கடமைப்பட்டுள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மேமாதம் 30ம் தேதி முதல் ஜூன் மாதம் 3ம் தேதி முடிய இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறவிருக்கும் அகில உலக குடும்பங்களின் மாநாட்டைக் குறித்து இச்செவ்வாயன்று விவரங்களைச் செய்தியாளர்களுக்கு வெளியிட்ட குடும்பநல பாப்பிறை அவையின் தலைவர் கர்தினால் Ennio Antonelli, இவ்வாறு கூறினார்.
மணமுறிவு பெற்றவர்கள் மீண்டும் தங்கள் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள 'Retrouvailles' என்ற கழகத்தைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Antonelli, இக்கழகத்தின் மூலம் தங்கள் மணவாழ்வை மீண்டும் உறுதிசெய்துள்ள தம்பதியர் மற்றவர்களுக்கு உதவிவருவதை எடுத்துக் கூறினார்.
பணிகள், ஒய்வு, மற்றும் கொண்டாட்டம் என்ற பல அம்சங்களின் வழியாக குடும்பங்கள் கட்டப்படுவதால் மிலான் நகரக் கூட்டத்தில் குடும்பத்தையும் கொண்டாட்டத்தையும் இணைப்பது எவ்வாறு என்பது மையக் கருத்தாக அமைந்துள்ளது என்று மிலான் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Angelo Scola செய்தியாளர்களிடம் கூறினார்.
3 இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மாநாட்டின் இறுதித் திருப்பலியைத் திருத்தந்தை நிறைவேற்றும்போது, அப்பலியில் 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வர் என்ற எதிர்பார்ப்பு உள்ளதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.