2012-05-23 15:48:52

தமிழ் நாட்டின் சிறைகளில் இருக்கும் 35 பேர் இவ்வாண்டு 12ம் வகுப்பு தேர்வினை எழுதி, அனைவருமே வெற்றி பெற்றுள்ளனர்


மே,23,2012. இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் என்ற இளைஞர் இவ்வாண்டு நடைபெற்ற 12ம் வகுப்பு அரசுத் தேர்வில் 91 விழுக்காடு மதிப்பெண் பெற்றுள்ளார்.
தமிழ் நாட்டின் பல்வேறு சிறைகளில் கைதிகளாய் இருக்கும் 35 பேர் இவ்வாண்டு அரசுத் தேர்வினை எழுதி, அனைவருமே தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர் என்றும், தேர்வு எழுதிய அத்தனைக் கைதிகளிலும் பேரறிவாளன் 1200 மதிப்பெண்களுக்கு 1096 மதிப்பெண்கள் பெற்று முதன்மையாக வெற்றி பெற்றுள்ளார் என்றும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
1991ம் ஆண்டு இராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டபோது அவருக்கு வயது 19. இந்தக் கொலைவழக்கில் கைதான பலரில் இவரே மிகவும் இளையவர். கவிதைகளில் அதிக ஆவல் கொண்ட பேரறிவாளன், திருக்குறள் மீது தனி பற்றுள்ளவர் என்று UCAN செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
சென்ற ஆண்டு 12ம் வகுப்புத் தேர்வு எழுதியவர்கள் 19 பேர் என்றும் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை ஏறத்தாழ இரு மடங்காகி, 35 பேர் தேர்வு எழுதி, அனைவரும் வெற்றி பெற்றிருப்பது மகிழ்வைத் தருகிறது என்றும் சிறைகளின் கூடுதல் காவல்துறை துறை உயர் தலைவர் S K Dogra செய்தியாளர்களிடம் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.