2012-05-22 15:19:06

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 122


RealAudioMP3 1970 மற்றும் 80களில் திருப்பயணம் என்பது இப்படித்தான் இருந்தது: வருடத்திற்கு ஒருமுறை வரும் திருவிழா ‘எப்பொழுது வரும்’ என ஆவலோடு காத்திருந்து செல்வார்கள். இரண்டு, மூன்று நாட்களுக்குத் தேவையான உணவைத் தயாரித்துக்கொண்டு, துணிமணிகளை எடுத்துக்கொண்டு பெரியப்பா, சித்தப்பா, அக்கா, தங்கை, அத்தை, மாமா என உறவினர்கள் கூட்டத்தோடு மாட்டுவண்டி கட்டிக்கொண்டு, எறும்புகள் ஊர்ந்து செல்வதுபோல் வரிசையாக செல்லும் அக்காட்சியே அழகாய் இருக்கும். திருத்தலத்திற்குச் சென்றவுடன், வருடத்திற்கு ஒரு முறை வந்தாலும் எழுதப்படாத சட்டம்போன்று அவர்களுக்கெனவே ஒதுக்கப்பட்டதுபோல மாட்டி வண்டி நிற்க ஓர் இடம் இருக்கும். அங்கு வண்டி மற்றும் உடைமைகளையெல்லாம் வைத்துவிட்டு, கோயிலுக்குச் சென்று, திருப்பலியை முடித்துவிட்டு, அங்கிருக்கும் கடைகளையெல்லாம் சுற்றிவந்து, வாங்க வேண்டியதையெல்லாம் வாங்கிவிட்டு, மீண்டும் மாட்டுவண்டிக்கு வந்து, அவர்கள் கொண்டுவந்த உணவை எல்லாரும் பகிர்ந்து உண்ணுவது இன்றைய சமுதாயத்தில் இல்லாத ஒரு மகிழ்ச்சி. அதுவும் வாகன வசதிகள் அதிகம் இல்லாததால், வெளியூர் சென்றுவர முடியாத கிராமப்புற ஆண்களும், எங்குமே வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் இளம் பெண்களும், வருடத்திற்கு ஒருமுறை வரும் திருவிழாவை, வருடம் முழுவதும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். திருவிழா அருகே வந்துவிட்டது, நாம் திருவிழாவிற்குப் போகிறோம் என்ற செய்தியைக் கேட்டதும் அவர்கள் மனதில் எழுகின்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்த உலகிலிருக்கும் எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை. அப்படிப்பட்ட மகிழ்ச்சியைத்தான் நாம் இன்று சிந்திக்கும் திருப்பாடல் 122ல் காண்கிறோம்.

அன்பர்களே! நாம் கடந்த இருவாரங்களாக மலையேறு திருப்பாடல்களைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இந்த வரிசையில் நாம் இன்று சிந்திப்பது திருப்பாடல் 122. இப்பாடலை திருநகரான எருசலேம் மீது கொண்ட அன்பின் மிகுதியால் அடியார் ஒருவர் எழுதியிருக்கக்கூடும் என விவிலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
‘எருசலேமைப் பார்க்க ஆர்வம் மிகுந்த இஸ்ரயேல் மக்கள் எருசலேமுக்குச் செல்கிறோம்’ என்ற செய்தியைக் கேட்டதும், அடைந்த மகிழ்ச்சியோடு துவங்குகிறது இப்பாடல். எருசலேம் நகர் ஒருங்கிணைந்து கட்டப்பட்ட, கோட்டைகள் அடங்கிய, அருமையான நகர் என ஆசிரியர் வர்ணிக்கிறார். இங்கு நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. ஏனெனில் இறைவன் வாழும் இல்லம் இங்குதான் உள்ளது என்று சொல்லும் ஆசிரியர், எருசலேமில் சமாதானம் நிலவ வாழ்த்தி, அங்கு அமைதி நிலவ வேண்டிக்கொள்ளுங்கள் எனவும் கேட்டுக்கொள்கிறார். இதோ இப்பாடலின் முதல் 5 சொற்றொடர்கள்.
ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம் என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்.
எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும்.
ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.
இஸ்ரயேல் மக்கள் எருசலேமுக்குச் செல்வதில் ஏன் இவ்வளவு ஆர்வமிக்கவர்களாய் இருந்தார்கள் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள எருசலேமுக்கும், அவர்களுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பை அறிந்துகொள்ள வேண்டும்.

இஸ்ரயேல் மக்களுக்கு எல்லாமே யாவே இறைவன்தான். பாரவோனின் அடிமைத்தனத்திலிருந்து அவர்களை மீட்டு, பாலைவனத்திலே அவர்கள் செய்த தவறுகளையெல்லாம் மன்னித்து ஏற்றுக்கொண்டு, பல்வேறு அருளடையாளங்களைச் செய்து, பாலும், தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்துவந்த யாவே இறைவன் அவர்களது வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டார். ஏதோ வானுலகில் வாழ்பவராக அவர்கள் இறைவனை உணரவில்லை. மாறாக அவர்களோடு வாழும் ஓர் உறவாகத்தான் அவரைப் பார்த்தார்கள். எனவேதான் அவருக்குக் கோவில் கட்டி, அங்கு வந்து அவரை வழிபட வேண்டும், அவரோடு பேச வேண்டும் என விரும்பினர்.
எடுத்துக்காட்டாக, பிறக்கும்போதே தாயையும், தந்தையையும் பறிகொடுத்த, பராமரிக்க ஆள் இல்லாத பச்சிளம் குழந்தையை வளர்த்தெடுத்து, கல்விப் புகட்டி, எல்லா வசதிகளையும் செய்துகொடுத்த ஒருவர், அக்குழந்தையின் மனதில் நீங்கா இடம் பிடிப்பாரல்லவா? அவர் வசிக்கும் வீட்டிற்கு அல்லது ஊருக்கு வரும்போது அக்குழந்தை எவ்வளவு மகிழ்ச்சியடையும் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாதல்லவா? அதே போன்ற மகிழ்ச்சிதான் இஸ்ரயேல் மக்களை ஆட்கொண்டிருக்க வேண்டும் எனக் கருதுகிறேன். இவ்வுருவகத்தில் வெளிப்படும் நெருங்கிய உறவே இஸ்ரயேல் மக்களுக்கும், யாவே இறைவனுக்கும், அவர் வாழ்ந்த எருசலேம் நகருக்கும் உள்ள தொடர்பை விளக்க சரியான எடுத்துக்காட்டு எனவும் கருதுகிறேன்.

இஸ்ரயேல் மக்களின் இதயத்தில் இவ்வளவு உயர்ந்த இடத்தைப் பிடித்த எருசலேம் நகரின் இன்றைய நிலை என்ன? எருசலேமில் கடந்த சிலமாதங்களாக தங்கி படித்துவரும் சகோதர குரு ஒருவர் தன் எருசலேம் வாழ்வின் சுருக்கத்தை இவ்வாறு சொன்னார்:
எருசலேம் என்று சொன்னதுமே எனக்கு நினைவுக்கு வருவது இரண்டு சிந்தனைகள். 1. கிறிஸ்தவ சமயத்தின் புனித தலம் என்று சொல்லப்படுகின்ற எருசலேம் இன்று ஒரு வியாபாரத்தலம் மட்டுமே. 2. அரசியல் மற்றும் சமயத்தின் பெயரால் அரங்கேறும் சண்டைகள்.
எருசலேம், புனிதத்தலத்திற்கான அனைத்து அடையாளங்களையும் இழந்து காணப்படுகிறது. இயேசு போதித்த வீதிகள் அதை கண்டு உணரமுடியாத அளவுக்கு முழுவதும் அடுக்குமாடிக் கட்டிடங்களால் நிரப்பப்பட்டுள்ளது. அக்கட்டடங்களில் வர்த்தகங்கள் நடைபெறுகின்றன. வீதிகளைப் பார்க்கும்போது புனிதத்தலத்திற்கான அறிகுறிகள் ஒன்றுமே கிடையாது. யோவான் நற்செய்தி 2ம் பிரிவில் இயேசு கோபம் கொண்டு வியாபாரிகளை விரட்டி அடித்தபோது இருந்த சூழலே இன்றும் நிலவுகிறது. இயேசு வாழ்ந்த, வளர்ந்த இடங்கள் முழுவதும் கடைகளால் நிரப்பப்பட்டுள்ளன. வியாபாரம் மட்டுமே மையப்படுத்தப்பட்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது.
மதங்களின் பெயரால் பிளவுகள் என்று சொல்லும்போது, இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம், சிலுவையில் தொங்கவிடப்பட்ட இடம் மற்றும் அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை ஆகியன மிக அருகருகே அமைந்துள்ளன. இவை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நினைப்பது போன்று கிறிஸ்தவர்களிடம் இல்லை. ஒரு பகுதி பழமைவாத கிறிஸ்தவர்கள் (Orthodox) கையிலும், இன்னொரு பகுதி கத்தோலிக்கர்களாகிய பிரான்சிஸ்கன் சபையினர் கையிலும், எஞ்சிய பகுதி அர்மேனியர்கள் கையிலும் உள்ளது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம், சிலுவையில் தொங்கவிடப்பட்ட இடம் மற்றும் அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை ஆகிய அனைத்திற்கும் சென்று வர ஒரே நுழைவாயில்தான். அந்நுழைவாயிலின் கதவை திறந்து, மூடுவது ஓர் இஸ்லாம் குடும்பத்தினர் கையில் உள்ளது. ஒரு வீட்டின் நான்கு சுவர்களும் நான்கு பேருக்குச் சொந்தமென்றால் அவ்வீட்டின் அமைதி சமாதானம் எவ்வாறு இருக்கும் என கற்பனை செய்து கொள்ள முடியுமல்லவா? இதுபோக, யூதர்களால் கட்டப்பட்ட எருசலேம் ஆலயம் இஸ்லாமிய மன்னர்களால் இடிக்கப்பட்டு அங்கு இஸ்லாமியர்களின் மசூதி அமைக்கப்பட்டுள்ளது. இன்றும் மெசியாவின் வருகைக்காக காத்திருக்கும் யூதர்கள் எருசலேம் ஆலயம் இடிக்கப்பட்ட போது எஞ்சிய ஓர் ஆலயச்சுவற்றில்தான் தலையை முட்டியபடி செபிக்கிறார்கள். இவையெல்லாம் போதாதென பாலஸ்தீனர்களும், இஸ்ரயேலரும் ஒருவர் ஒருவரை அழிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் போர் மூளலாம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இதுதான் இன்றைய எருசலேமின் நிலை.

புனிதமும், புனிதத்திற்கு அழைத்துச் செல்லும் அமைதியும் நிலவவேண்டிய இடத்தில் போர் வீரர்களும், துப்பாக்கிகளும், பகையும், பயமும் நிலவுகிறது. அமைதிக்காக, அன்புக்காக, நீதிக்காக இயேசு உயிர் நீத்த இடத்தில் இன்று அமைதியும் இல்லை, அன்பும் இல்லை. இன்றைய எருசலேமைப் பார்த்து நகைக்கிறோம் அல்லது பரிதாபப்படுகிறோம் அல்லது வேதனைப்படுகிறோம்.

அன்பார்ந்தவர்களே! நமது சிந்தனையை எருசலேமிலிருந்து நம்மை நோக்கித் திருப்புவோம். நமக்கு எருசலேம் எது? நம்முடைய கோவில்களும், தலத்திருஅவையும் தானே? நமது கோவில்களில் நிலை என்ன? ஏறக்குறைய அதே போன்ற சண்டைகளும், சச்சரவுகளும் நமது கோவில்களிலும் இருக்கத்தானே செய்கின்றன. சாதியப்பாகுபாடு, செல்வந்தர் - ஏழை பாகுபாடு, ஆண் - பெண் பாகுபாடு, இளையோர் - மூத்தோர் பாகுபாடு, வலிமை மிகுந்தோர் - வலிமை குறைந்தோர் என நமது கோவில்களிலும் பாகுபாடுகள் இருக்கத்தானே செய்கின்றன.

எருசலேமிற்குச் செல்ல வேண்டும், ஆண்டவரை வழிபடவேண்டும் என்று இஸ்ரயேல் மக்களுக்கிருந்த ஆர்வம் நமக்கு இருக்கிறதா? விவிலியத்தில் வாசிப்பதுபோல தடாலடி அருளடையாளங்கள் இல்லையெனினும் அவர்களைப் போலவே நம்மையும் இறைவன் கண்ணின் மணிபோல காத்து வருகின்றார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படியெனில் இஸ்ரயேல் மக்கள் இறைவன் மேல் கொண்டிருந்த பாசம், அன்பைப் போன்று நமக்கும் அவர் மேல் பாசம், அன்பு வரவேண்டுமல்லவா? வருகிறதா? என்றால், பெரும்பாலும் இல்லை என்ற பதில்தான் விடையாகக் கிடைக்கிறது. நான் உதவிப் பங்குத்தந்தையாக பணியாற்றியபோது, ஞாயிறு திருப்பலி முடிந்து மறைக்கல்வி, பக்த சபை கூட்டங்கள் மற்றும அன்பியங்களை நடத்தும்போது, “வாரம் முழுவதும் வேலை, ஞாயிறு மட்டும்தான் விடுமுறை. ஒரு நாள் ஓய்வு எடுக்க விடமாட்றீங்க” என சிலர் விளையாட்டாக சொல்வதைப்போல நேரடியாகவே என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

உள்ளுர் எருசலேமான நமது கோவில்களுக்கு நாம் எதற்காகச் செல்கிறோம்? கோவிலுக்கு நாம் செபிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடுதான் செல்கிறோம் ஆனால் அவ்வெண்ணம் எத்தனை சதவீதம் நிறைவேறுகிறது அன்பார்ந்தவர்களே? திருப்பலியில் கவனம் செலுத்துகிறோமா? நம்மால் இறைவனோடு பேச முடிகிறதா? இறைவன் பேசுவதை நம்மால் கேட்க முடிகிறதா? இவையெல்லாம் முடியவில்லையெனில் நாம் கோவிலுக்குச் சென்று வருவதின் பயன் என்ன?
கோவில்களில் நமது செபங்கள் எப்படியிருக்கின்றன. நம்மை மட்டும் மையப்படுத்தியவையா அல்லது நம்மைச் சுற்றியுள்ள எல்லாருக்காகவும் செபிக்கிறோமா? யோவான் நற்செய்தியில் இயேசு “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக” என்று செபித்ததைப் போன்று திருச்சபையின் ஒற்றுமைக்காக செபிக்கிறோமா?

செபித்து முடித்து வீடு திரும்பிய பிறகு நமது வாழ்வு எப்படியிருக்கிறது? அதேபோன்ற பழைய வாழ்வா அல்லது கோவிலில் கேட்ட இறைவார்த்தையின்படி வாழ்வா? கோவிலுக்குள் வரும்போது இருந்த அதே பகைமையும், கோபமும், பழிவாங்கும் எண்ணமும் கோவிலை விட்டு வெளியில் செல்லும்போதும் இருந்தால், எருசலேம் நகருக்கும், நமக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. பல சமயங்களில் வழிபாடு வேறு நடைமுறை வாழ்க்கை வேறு என்று சொல்கிறோம். இது எவ்வளவு தவறானது என்பதை உணர்கிறோமா? வழிபாடு வாழ்க்கையாக்கப்படவேண்டும். இல்லையெனில் அது வீண். நமது வாழ்வும் வழிபாடும் இணைந்து செல்ல வேண்டும் நம்முடைய அன்பும், அமைதியும் பிறரிடமிருந்து நம்மைப் பிரித்துக்காட்ட வேண்டும். நமது தலத்திருச்சபையிலும், நமது குடும்பங்களிலும் அமைதி நிலவ, பாகுபாடுகள் குறைய சிறு சிறு முயற்சிகள் எடுக்க வேண்டும்.
உள்ளுர் எருசலேமான நமது கோவில்களில் வழிபாடு மட்டுமல்ல நமது உறவுகளும் சிறப்பாக அமையப் பாடுபட வேண்டும். அதே சமயத்தில் திருப்பாடல் ஆசிரியர் சொல்வதைப் போன்று புனித்தலமான எருசலேமில் அமைதி நிலவச் செபிக்க வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.