2012-05-21 14:06:13

வாரம் ஓர் அலசல் - நம்மால் மாற்ற முடியும்


மே21,2012. வட இத்தாலியின் Modena மற்றும் Mantova நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இஞ்ஞாயிறு அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 6 பேர் இறந்துள்ளனர், 50 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். 15ம் நூற்றாண்டு அரண்மனைக்கோட்டை, பழமையான மணிக்கூண்டு, மண்பாண்டத் தொழிற்சாலை, வரலாற்று சிறப்புமிக்க ஆலயம் என பல வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களும், நினைவுச்சின்னங்களும், வீடுகளும், வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன. கட்டட இடிபாடுகளுக்கு இடையில் பலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மீட்புப்பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன. இதே இத்தாலியின் தெற்கில், பிரிந்திசி நகரத்தில், இச்சனிக்கிழமை காலை சுமார் 7.45 மணியளவில் ஒரு பள்ளியின் முன்பாக குண்டு வெடித்ததில் 16 வயது இளம்பெண் கொல்லப்பட்டார் மற்றும் சில மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மாணவரின் புத்தகங்களும் தீப்பிடித்து எரிந்தன. ஏற்கனவே கடும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்து வரும் இத்தாலியின் துன்பத்தை இவ்விரு நிகழ்வுகளும் மேலும் அதிகமாக்கியுள்ளன. சொமாலியத் தலைநகர் Mogadishu வில் இச்சனிக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். வன்முறைத் தாக்குதல்கள் தொடர்ந்து இடம் பெற்று வரும் சிரியாவில் இஞ்ஞாயிறன்றும் 16 பேர் இறந்துள்ளனர். ஏமனில் கடந்த வெள்ளி்க்கிழமை இராணுவம் நடத்திய தாக்குதலில் 18 அல் கெய்தா பயங்கரவாதிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடான சிலேயின் வடக்குப் பகுதியிலும் இச்சனிக்கிழமையன்று நிலநடுக்கம் ஏற்பட்டது
கடந்த வாரத்தை மட்டும் நோக்கினால், உலகில் இன்னும் எத்தனையோ இடங்களில் இயற்கைப் பேரிடராலும் மனிதரின் வெறிச் செயல்களாலும் ஏற்பட்டுள்ள ஆள்சேதங்களும் பொருள்சேதங்களும் சொற்களுக்குள் அடங்காதவை. மனிதரின் பேராசை, சுரண்டல், ஊழல் போன்ற இவற்றைப் பொறுக்காத பூமி, தனது பாதிப்பை நிலநடுக்கங்களாக அவ்வப்போது வெளிப்படுத்தி மனிதரை எச்சரிக்கின்றது. கடலும் அவ்வப்போது கொந்தளித்து பேரலைகளை எழுப்பி அச்சுறுத்துகின்றது. காற்று மண்டலமும் வான மண்டலமும் புயல்காற்றையும் வெப்பக்காற்றையும் வீசி மனிதரது பேராசைக்குச் சவால் விடுக்கின்றன. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் போன்ற ஆன்மீகத் தலைவர்களும் நன்மனம் கொண்ட சமூகத் தலைவர்களும், அப்பாவிகளின் உயிர்களை உறிஞ்சும் மனிதரின் பயங்கரவாதச் செயல்களையும், தன்னலப்போக்கையும் கண்டித்துப் பேசி வருகின்றனர். இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்னரும், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த இருபதாயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளிடம் பல்வேறு மொழிகளில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த போது, இத்தாலியின் பிரிந்திசி நகரப் பள்ளியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள், குறிப்பாக அதில் இறந்த இளம் பெண் Melissaவை நினைவுகூர்ந்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். வேதனையில் இருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும், இன்னும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனது செபங்களையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார். இந்தக் குண்டுவைப்புச் செயலைக் “கொடூரமான வன்செயல்” எனவும் கண்டித்துப் பேசினார் திருத்தந்தை.
RealAudioMP3 அன்பு நேயர்களே, மே 21, அனைத்துலக கலாச்சாரப் பன்மைத்தன்மை நாள். பல்வேறு கலாச்சாரங்கள் மத்தியில் உரையாடலையும் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்நாள் சிறப்பிக்கப்படுகின்றது. பல்வேறு கலாச்சாரங்கள் குறித்து மக்கள் நன்றாகப் புரிந்துகொண்டு, பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட மக்களோடு நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தையும் இந்நாள் கொண்டுள்ளது. உலக அளவில் தாராளமயமாக்கல் கொள்கை பரவத் தொடங்கியதிலிருந்து ஏறக்குறைய எல்லா நாடுகளிலும், பல கலாச்சாரங்களைக் கொண்ட பல்வேறு நாட்டினரைக் காண முடிகின்றது. நாளுக்குநாள் குடியேற்றதாரரின் எண்ணிக்கையும் நாடுகளில் அதிகரித்து வருகின்றது. அதேசமயம், மக்கள் மத்தியிலும், மதத்தினர் மத்தியிலும் சகிப்புத்தன்மையும், ஒருவரையொருவர் மதித்து வாழ்வதும் எந்நிலையில் இருக்கின்றது, முன்னேறுவதற்கான உரிமை உட்பட மனித உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கின்றன. இந்த நாட்டுக்குச் சுற்றுலாப் பயணம் சென்றால் பாதுகாப்பாகத் திரும்பி வர முடியுமா என்ற அச்சம் சில நாடுகள் மீது மக்களுக்குப் பரவலாக இருக்கின்றது. எந்த நாட்டில், எந்த நேரத்தில், எங்கு குண்டு வெடிக்கும் என்ற கேள்வியோடு இன்று நாளைத் தொடங்கும் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
ஒன்று எங்களை எரியவிடுங்கள்!
இல்லை எங்களை அணைத்துவிடுங்கள் !
எரித்தும் அணைத்துமாய் எரிக்காதீர்கள்..!
திரிகளான நாங்கள்
எரிவதைக் காட்டிலும் அணைப்பதிலேயேதான்
அதிகம் கருகுகிறோம்..!
இந்தக் குமுறலை ஒருவர் வலைத்தளத்தில் பதித்திருந்தார். தனது வேலையைச் செய்யவிடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்த தனது குட்டி மகளுக்கு ஒரு வேலை கொடுத்தார் தந்தை. ஓர் உலகப் படத்தைத் தாறுமாறாகக் கிழித்து அந்தக் காகிதத் துண்டுகளை ஒன்று சேர்க்குமாறு சொன்னார் தந்தை. சில நிமிடங்களுக்குள் அந்த உலக வரைப்படத்தை ஒட்டி தந்தையை வியப்பில் ஆழ்த்தினாள் அச்சிறுமி. இந்தக் கதையை நாம் பலமுறைக் கேட்டிருக்கிறோம். ஆம். இன்று உலகம் அவ்வளவு சிறியதாகி விட்டது. இந்த உலகத்தில் சகிப்புத்தன்மை வளர்ந்து மனித உரிமைகள் மதிக்கப்படுவதற்கு நம்மால் எதுவும் செய்ய முடியுமா?. நிச்சயமாக முடியும். இங்கிலாந்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள், 4 கண்டங்களிலுள்ள 50 நாடுகள் வழியாக 69 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை வாடகைக் காரிலே பயணம் செய்து மீண்டும் இலண்டனை அடைந்து சாதனை படைத்துள்ளனர். Tamae Watanabe என்ற 73 வயது ஜப்பானியப் பெண், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, மிக அதிக வயதில் இச்சிகரத்தை அடைந்த பெண் என்ற பெயரைப் பெற்றுள்ளார். மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த மால்லோய் கெவின்மேன் என்ற 13 வயது மாணவி, விக்கல் ஏற்பட்டால் அதை உடனடியாக நிறுத்துவதற்கு லாலிபாப் மிட்டாயை உருவாக்கியிருக்கிறார். இவ்வாறு ஒவ்வொரு நாளும் பல்வேறு வயதினர் புதிது புதிதாக எதையாவது செய்து வருகின்றனர். எனவே பல சாதியினர், பல இனத்தவர், பல நிறத்தவர், பல மொழியினர் மத்தியில் வாழும் நம்மாலும் நல்லிணக்க வாழ்வை ஏற்படுத்த முடியும். இந்த முயற்சியில் நம்மாலும் சாதனை படைக்கமுடியும். நம் அனைவரது கைகளும் கால்களும் சேர்ந்து செயல்படும்போது நம்மாலும் சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர முடியும்.
வாழ்க்கையில் முன்னேற விரும்பிய வியாபாரி ஒருவர் வேறு நாடு சென்றார். அவர் வீட்டைவிட்டுப் புறப்பட்ட சமயம் அவருடைய மனைவி கருவுற்றிருந்தார். ஒரு மகனும் பிறந்தான். வேறு நாடு சென்றவர் இருபது ஆண்டுகள் ஆகியும் திரும்பி வரவே இல்லை. அதற்குள் அவரது மகனும் வளர்ந்து தந்தையைப் போல வியாபாரம் செய்வதற்கு வெளிநாடு சென்றான். ஒருநாள் ஒரு நாட்டில் ஒரு பன்னாட்டுச் சந்தையில் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். இன்டர்னெட், தொலைபேசி வசதி இல்லாத அக்காலத்தில், தந்தைக்கு மகனை அடையாளம் காண முடியவில்லை. அதேபோல் மகனுக்கும் தந்தையைத் தெரியவில்லை. வியாபாரம் தொடர்பாக இவ்விருவரும் ஏதோ பேச இவர்களுக்குள் உடன்பாடு ஏற்படாமல் வார்த்தை முற்றியது. இருவரும் அவரவர் வாளைக் கையில் எடுத்தார்கள். ஒருவரையொருவர் வெட்டப்போகும் அந்த நேரத்தில் ஒரு பெரியவர் அவர்களைக் குறுக்கிட்டார். இந்தப் பெரியவர் இவ்விருவரையும் தெரிந்தவர். ஆதலால் மோதலை நிறுத்தினார். அவர்கள் இருவரும் தந்தை மகன் என்ற உறவை விளக்கிச் சொன்னார். உண்மை தெரிந்தவுடன் ஓங்கிய வாளைக் கீழே போட்டார்கள். ஒருவரையொருவர் அன்புடன் கட்டித் தழுவிக் கொண்டார்கள்.
இந்தத் தந்தையையும் மகனையும் ஒன்று சேர்த்து வைத்த அந்தப் பெரியவர் போன்று நாமும் நல்லிணக்கவாதிகளாகச் செயல்படலாம். பல அடுக்குகள் கொண்ட அந்த வீட்டில் ஒரு தளத்தில் வாழ்ந்து வந்த கணவனும் மனைவியும் ஒருநாள் மாலை காரசாரமாகச் சண்டைபோட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென மனைவி கணவனிடம், சிறிது நேரம் பேசாமல் இருப்பீர்களா என்று கேட்டார். ஆனால் கணவனோ சண்டையை நிறுத்துவதாய் இல்லை. மீண்டும் மனைவி அவரிடம், ஐயோ, அடுத்த வீட்டில் சண்டைச் சத்தம் கேட்கிறது. அதைக் கேட்போம், சிறிது நேரம் நீங்கள் மௌனமாக இருப்பீர்களா என்றாராம். அன்பர்களே, இந்த மாதிரியான ஆள்கள் நல்லிணக்கச் செயல்களில் எப்படி ஈடுபட முடியும். வெவ்வேறு மொழியினர், வெவ்வேறு மதத்தினர், வெவ்வேறு நாட்டினர் ஒரே குடியிருப்பில் வாழ்ந்துவரும் சூழல் அதிகரித்து வருகிறது. எனவே முதலில் நம்மில் சகிப்புத்தன்மையை வளர்த்து பிறரில் அதை ஊக்குவிக்க முயற்சிப்போம். சொல்லைவிட செயல் சிறந்த பாடம். போதிப்பதைவிட வாழ்ந்து காட்டுவது சிறந்த எடுத்துக்காட்டு. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். அப்போது நாம் வாழும் சமுதாயமே அன்பில் வாழும் சமுதாயமாக, வன்முறைகளைக் கைவிட்ட சமுதாயமாக மாறும். பிறரை அன்புகூரத் தொடங்கும் போது நமது மனம் அன்பாலும் மகிழ்ச்சியாலும் நிரம்பும். மனது நலமடைய இதுவே சிறந்த வழி. நமது மனம் நலமாக இருந்தால்தான் பிறரது நலத்தில் அது அக்கறை செலுத்தும். செக்குமாடு போல் ஒரே வளையத்தைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்காமல் புதுப்புது எண்ணங்களால் மனதை நிரப்பி சகிப்புத்தன்மை சமுதாயத்தைச் சமைப்போம்.







All the contents on this site are copyrighted ©.