2012-05-21 14:03:59

கவிதைக் கனவுகள்.... ஆணவம் அழிய


நான்தான் புத்திசாலி நான்தான் அறிவாளி
நான்தான் நாலும் தெரிந்தவன்
தலைக்கேறிய ஆணவத்தோடு
அக்கம்பக்கத்தாரைப் பந்தாடிக் கொண்டிருந்தவரை
அடக்க கேள்வி ஒன்று கேட்கப்பட்டது
அறிவாளி யார்? புத்திசாலி யார்?
பதிலறியாது திகைக்க,
பக்கத்து ஊருக்குப் போக எவ்வளவு நேரம் எடுக்கும்
என்ற கேள்வியுடன் அனுப்பப்பட்டார்
அந்த ஊர் ஞானியிடம்
ஞானியிடம் கேள்வியைக் கேட்டுக் கொண்டேயிருக்க
பதில் இல்லை
ஆணவத்தைப் பெருக்கிக் கொண்டு
அவர் வந்த வழியே நடையைக் கட்டினார்
திரும்பிச் சென்றவரை அழைத்தார் ஞானி
தம்பி, நீ இந்த வேகத்தில் நடந்தால்
பத்து நிமிடம் ஆகும்.
கணீரெனப் பதில் வந்தது.
இந்தப் பதிலுக்கா இவ்வளவு நேரம்...
இல்லை தம்பி, உனது நடையின் வேகம் கண்டு
ஊரின் தூரத்தை வைத்து
நேரத்தைக் கணக்கிட்டேன்...
ஞானியின் பதிலில் அடக்கம் இருந்தது. புத்திசாலித்தனம் இருந்தது,
எல்லாம் தெரிந்தவனின் ஆணவமும் அடங்கியது.
கேள்விக்குப் பதிலும் கிடைத்தது.
அவருக்கு ஒரு குரலும் கேட்டது.....
மழைநீர்த் தனியாகத் தேங்கினால் வற்றிவிடும்
கடலில் கலந்தால் கடல் நீராகிவிடும்.
உனது திறமைகள் எல்லாம் இறைவனுடையவை
இம்மனநிலையில் வாழ்.
இறையருள் கடலில் என்றுமே உனக்கு இன்பப் பயணம்தான்.








All the contents on this site are copyrighted ©.