2012-05-19 15:19:29

பற்றுறுதி போன்று கலையும் மனிதரில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகின்றது - கர்தினால் ரவாசி


மே19,2012. உண்மையான கலை ஆர்வத்தைத் தூண்டுவது, இது ஒருவரைப் பாராமுகமாய் இருக்கச் செய்யாது என்பதால், கலையும் பற்றுறுதி போன்று மனிதரில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று திருப்பீட கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசி கூறினார்.
இஸ்பெயின் நாட்டு பார்செலோனாவின் தேசிய கலை அருங்காட்சியகத்தில் இவ்வியாழன் முதல் நடைபெற்று வரும் “புறவினத்தார் முற்றம்” என்ற அமைப்பின் அமர்வில் உரையாற்றிய கர்தினால் ரவாசி, கலையில் காணப்படும் மேலெழுந்தவாரியான தன்மைக்கு எதிராய்ச் செயல்படுமாறு எல்லாருக்கும் அழைப்பு விடுத்தார்.
அதேசமயம், கலையும் பற்றுறுதியும் எல்லாம்வல்ல இறைவன் பக்கம் திரும்புவதற்கான ஒரு நுழைவாயிலாக இருப்பதால், காணக்கூடியதில் காணக்கூடாதவரைத் தேடவும் கர்தினால் ரவாசி கேட்டுக் கொண்டார்.
இக்காலத்திய மனிதர் இறைவனோடு தொடர்பு கொள்வதற்கு உதவியாக, புதிய “புறவினத்தார் முற்றங்களைத்” திறக்குமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைப்பு விடுத்ததன் பேரில் திருப்பீட கலாச்சார அவை உலகெங்கும் “புறவினத்தார் முற்றங்களை” நடத்தி வருகின்றது.







All the contents on this site are copyrighted ©.