2012-05-19 15:17:15

திருத்தந்தை : தன்னையே வழங்குதல் கிறிஸ்தவ வாழ்வின் மையம்


மே19,2012. ஒரு சமுதாயத்தின் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் பொதுநிலை விசுவாசிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
FOCSIV, MEIC, MCL எனப்படும் இத்தாலிய திருஅவை இயக்கம், சர்வதேச தன்னார்வப் பணியாளர் கிறிஸ்தவ தொண்டு அமைப்புக்களின் கூட்டமைப்பு, கிறிஸ்தவத் தொழிலாளர் இயக்கம் ஆகிய மூன்று இத்தாலிய இயக்கங்களின் சுமார் எட்டாயிரம் பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று பாப்பிறை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
1932க்கும் 1972ம் ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கழகங்களின் பணி, தங்களது தன்னார்வச் சேவை மூலம் நற்செய்தியைப் பரப்புவதே என்றுரைத்த திருத்தந்தை, இந்தப் பணிகளில், இத்தாலியிலும் பிற நாடுகளிலும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், சமூகநீதியையும் கல்வியையும் ஊக்குவித்தல் ஆகியவையும் உள்ளடங்கியுள்ளன என்றும் கூறினார்.
எந்தத்துறையில் தன்னார்வப்பணி செய்தாலும், கிறிஸ்தவராய் இருப்பதன் உண்மையான அர்த்தத்தை அப்பணிகள் கொண்டுள்ளன எனவும், ஒருவர் தன்னையே வழங்குதல் என்பது சட்டத்தினாலோ அல்லது பொருளாதாரத்தினாலோ பெறப்படுவது அல்ல என்பதையும் சுட்டிக் காட்டினார்.
இயக்கங்கள் தங்களது ஆண்டு நிறைவுகளைச் சிறப்பிப்பது என்பது, அவை தொடங்கப்பட்டதன் நோக்கம் மற்றும் காலத்தின் புதிய அடையாளங்கள் மீது கவனம் செலுத்தி, நன்றி செலுத்துவதாகும் என்றும் திருத்தந்தை கூறினார்.
அன்பைச் சுதந்திரமாக வழங்குவதை முதலில் அனுபவிக்கும் இடம் குடும்பம் என்றும், பிறரின் நலனுக்காக தன்னையே அளிப்பது குடும்பத்தில் நடக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.







All the contents on this site are copyrighted ©.