2012-05-19 15:18:27

உரோம் பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை 6ம் பவுல் குறித்த ஆய்வுத்துறை


மே19,2012. இத்தாலியில் வருகிற கல்வியாண்டில் உரோம் பல்கலைக்கழகம் ஒன்று, திருத்தந்தை 6ம் பவுல் குறித்த ஆய்வுத்துறையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக இவ்வெள்ளியன்று அறிவித்தது.
வருகிற அக்டோபரில் தொடங்கும் கல்வியாண்டில், LUMSA எனப்படும் உரோம் Libera புனித விண்ணேற்பு அன்னை பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை 6ம் பவுலின் போதனைகள் குறித்த பாடங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வெள்ளியன்று இடம் பெற்ற நிருபர் கூட்டத்தில், திருப்பீட ஆயர் பேராயத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் Giovanni Battista Re, இப்புதிய துறை குறித்து அறிவித்தார்.
மறைந்த திருத்தந்தை 6ம் பவுலின் தாக்கங்கள் குறி்ததுப் படிப்பது தகுதியானது என்றுரைத்த கர்தினால் Re, 20ம் நூற்றாண்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இத்திருத்தந்தையின் தனித்திறமை, இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் பணிகளுக்கு இன்றியமையாதவைகளாக இருந்தன என்று பாராட்டினார்.
இத்தாலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு உருவானதில் முக்கிய அங்கம் வகித்தவர் திருத்தந்தை 6ம் பவுல். அத்துடன், இரண்டாம் உலகப் போரின் போதும் அதற்குப் பின்னரும் நிவாரணப் பணிகளை, குறிப்பாக, யூத அகதிகளுக்கு இடர் துடைப்புப் பணிகளை ஆற்றியவர். இவை போன்று இன்னும் பல சிறந்த பணிகளைச் செய்திருப்பவர் திருத்தந்தை 6ம் பவுல்.







All the contents on this site are copyrighted ©.