2012-05-18 15:47:53

இருபால் துறவியருடன் நல்லதோர் உறவை வளர்க்க அமெரிக்க ஆயர்களுக்குத் திருத்தந்தை வலியுறுத்தல்


மே 18,2012. தங்களது வாழ்வு முழுவதையும் நற்செய்தி அறிவுரைகளின்படி வாழ்வதற்கு உறுதி எடுக்கும் ஆண்,பெண் துறவிகளின் சான்று பகரும் வாழ்வு இக்காலத்துக்கு மிகவும் தேவைப்படுகின்றது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களிடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஆயர்கள் திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினாவையொட்டி அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் 14 மற்றும் 15 வது குழுவின் 15 ஆயர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் திருஅவையின் பணிகளை முழுமையாய்ச் செய்வதற்கு, அந்நாட்டுக் கத்தோலிக்கர் மத்தியில் ஒன்றிப்புத் தேவை என்பதைக் கடந்த ஆறு மாதங்களாகத் தான் சந்தித்து வந்த அந்நாட்டு ஆயர்களிடமிருந்து அறிந்து கொண்டதாகத் தெரிவித்த திருத்தந்தை, குடியேற்றதாரர் விவகாரம், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்வோரின் சாட்சிய வாழ்வு ஆகிய இரண்டு விவகாரங்களை இச்சந்திப்பில் தான் வலியுறுத்த விரும்புவதாகக் கூறினார்.
நமது விசுவாசம் எனும் விலைமதிப்பில்லாத சொத்தை மகிழ்ச்சியோடும் நன்றியோடும் வாழ்வதற்கான ஆவலை, வருகிற அக்டோபரில் ஆரம்பமாகும் விசுவாச ஆண்டு அமெரிக்கக் கத்தோலிக்கச் சமுதாயம் முழுவதுக்கும் தட்டி எழுப்பும் என்ற தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார் திருத்தந்தை.
கத்தோலிக்கச் சமுதாயத்தில் நிலவும் ஒன்றிப்பு, புதிய நற்செய்திப்பணியின் நேர்மறைச் சவால்களைச் சந்திப்பதற்கு உதவுவதோடு, அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலத்திருஅவையின் மறைப்பணிக்குப் பெரும் தடைகளாக இருக்கின்ற சக்திகளை எதிர்த்துச் செயல்படவும் உதவும் என்றும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உலகளாவியத் திருஅவையில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை இரண்டாவது பெரிய ஆயர் பேரவையாகும். இப்பேரவையின் ஆயர்களை 15 குழுக்களாகச் சந்தித்து வந்த திருத்தந்தை, இவ்வெள்ளியன்று அதன் கடைசிக் குழுவினரைச் சந்தித்தார்.
இந்திய ஆயர் பேரவை நான்காவது பெரிய பேரவையாகும்.







All the contents on this site are copyrighted ©.