2012-05-17 15:33:15

மகாராஷ்டிரா மாநிலத்தில் கக்தாரி பழங்குடியினரிடையே இயேசுசபையினர் பணி


மே,17,2012. பழங்குடி மக்களின் கலாச்சாரத்தைக் காப்பதும், அரசிடம் இருந்து பெறக்கூடிய அவர்களின் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வைத் தூண்டுவதும் தங்கள் பணி என்று இயேசுசபை அருள்தந்தை Diago D'Souza கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கக்தாரி (Kaktari) என்ற பழங்குடியினரிடையே கல்வி, மருத்துவம், பெண்ணுரிமைப் போராட்டம் ஆகியப் பணிகளை மேற்கொண்டுள்ள Janhit Vikas என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் அருள்தந்தை Diago, ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியொன்றில் தங்கள் பணிகளை விளக்கிக் கூறினார்.
கக்தாரி மக்கள் வேலை தேடி இடம் விட்டு இடம் செல்லும் நாடோடிகள் என்பதால், அவர்களுக்கு நீதிமுறைப்படி கிடைக்க வேண்டிய கூலி கொடுக்கப்படுவதில்லை என்று கூறிய அருள்தந்தை Diago, இம்மக்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதே தங்கள் பணியின் முக்கிய அம்சம் என்று கூறினார்.
இம்மக்களுக்கு அடிப்படை கல்வி வழங்குதல், மூலிகை மருந்துகள் பற்றி அவர்களிடம் உள்ள பரம்பரை அறிவை வளர்த்தல், அவர்கள் மத்தியில் உள்ள குடிப்பழக்கத்தை நிறுத்துதல் ஆகியவை தங்கள் முக்கியப் பணிகள் என்று Janhit Vikas அமைப்பின் இயக்குனர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.