2012-05-17 15:31:49

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் Nostra Aetate ஏடு கத்தோலிக்கருக்கும் யூதர்களுக்கும் இடையே நடைபெற வேண்டிய உரையாடலுக்கு வழிவகுத்த ஏடு -வத்திக்கான் அதிகாரி


மே,17,2012. 'நமது காலத்தில்' என்ற பொருள்படும் Nostra Aetate என்ற இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் ஏடு கத்தோலிக்கருக்கும் யூதர்களுக்கும் இடையே நடைபெற வேண்டிய உரையாடலுக்கு வழிவகுத்த ஒரு சிறந்த ஏடு என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் Nostra Aetate ஏடு வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, உரோம் நகரில் உள்ள Angelicum பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய கிறிஸ்தவ ஒற்றுமைக்கானத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch, தன் தலைமையுரையில் இவ்வாறு கூறினார்.
கிறிஸ்தவ மதிப்பீடுகளுடன் வளர்ந்த ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின்போது யூதர்களுக்கு எதிராக எழுந்த வன்முறைகளைப் பற்றி ஓர் ஆழமான மனச்சான்று ஆய்வை மேற்கொள்ள Nostra Aetate என்ற இந்த ஏடு பெரிதும் உதவியது என்று கர்தினால் தன் உரையில் எடுத்துரைத்தார்.
நாத்சி அடக்கு முறைகளின்போது, வன்முறைகளைக் கையாண்டது பெரும்பாலும் கிறிஸ்தவர்களே என்றாலும், இந்த வன்முறைகளுக்கு பலியானவர்களில் பலரும் கிறிஸ்தவர்கள் என்பது உண்மை என்பதைக் கூறிய கர்தினால் Koch, இதுபோன்ற ஆபத்தை மனித சமுதாயம் இனி சந்திக்காமல் இருக்க கிறிஸ்தவர்களும் யூதர்களும் உரையாடலில் ஈடுபடுவது அவசியம் என்று எடுத்துரைத்தார்.
இப்படிப்பட்ட உரையாடலை வளர்க்கும் அனைத்து முயற்சிகளையும் திருஅவை ஆவலாய் ஆதரிக்கும் என்று கிறிஸ்தவ ஒற்றுமைக்கானத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch தன் உரையின் இறுதியில் வலியுறுத்திக் கூறினார்








All the contents on this site are copyrighted ©.