2012-05-15 15:33:47

உளவியல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இலங்கைப் படையினர்


மே,15,2012. இலங்கையில் ஆயுதப்படைகளுக்குள் அதிகரித்துவரும் தற்கொலைகள் மற்றும் கொலைகள் காரணமாக, முப்படையினர் மற்றும் காவல்துறையினரை உளவியல் மதிப்பீட்டுக்கு உட்படுத்தவேண்டிய அவசிய நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது.
2006ம் ஆண்டில் இருந்து படைகளுக்குள் தற்கொலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. 2006ம் ஆண்டில் இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த 52 பேரும், 6 காவல்துறை அதிகாரிகளும் தற்கொலை செய்து கொண்டனர் என்று தெரிகிறது.
2010, 2011ம் ஆண்டுகளில் இலங்கையின் முப்படையினர் மற்றும் காவல்துறையினரின் தற்கொலை மரணங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லையெனினும் இவ்விரு ஆண்டுகளிலும் ஒவ்வோர் ஆண்டும் 100க்கும் அதிகமான தற்கொலை மரணங்கள் இடம்பெற்றுள்ளன என்று கூறப்படுகிறது.
இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பின்னர், படையினரின் உளவியல் நிலை மோசமடைந்துள்ளதாலேயே இத்தகையச் சம்பவங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள கொழும்பு ஊடகம், படையினர் அனைவரும் உடனடியாக உளவியல் மதிப்பீட்டுக்கு உட்படுத்த வேண்டியது அவசரத் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.