2012-05-15 15:31:26

அனைவரும் ஒன்றிணைந்து அமைதியைத் தேடும் முயற்சியில் ஈடுபடவேண்டும் - தெற்கு சூடான் ஆயர்கள்


மே,15,2012. தெற்கு சூடானில் வாழும் மக்களும் அந்நாட்டு அரசும் அமைதி வேண்டி போராடி வருகின்றனர் என்று அந்நாட்டின் ஆயர்கள் கூறியுள்ளனர்.
தெற்கு சூடானில் தற்போது நிலவி வரும் பதட்டமான சூழலிலிருந்து நாட்டைக் காக்க, அனைவரும் ஒன்றிணைந்து அமைதியைத் தேடும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்று 14 பேர் கொண்ட அந்நாட்டின் கத்தோலிக்க, ஆங்கலிக்கன் ஆயர்கள் குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற்ற பல தாக்குதல்களுக்குப் பின், மே மாதத் துவக்கத்தில் ஒன்று கூடிய ஆயர்கள், சூடானும், தெற்கு சூடானும் பகைமை உணர்வுகளைத் தூண்டும் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு, மக்களைக் காக்கும் வழிகளை வலியுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதிதாக உருவாகியுள்ள தெற்கு சூடான் நாட்டு அரசு, மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பணிகளில் முழு கவனத்தையும் செலுத்துமாறும், சூடான் நாட்டுடன் மோதல்களைத் தவிர்க்குமாறும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
சூடானும், தெற்கு சூடானும் விடுத்துவரும் அறிக்கைகளில் உள்ள உண்மைகளை அகில உலக அரசுகள் ஆய்வு செய்ய வேண்டுமென்றும், தெற்கு சூடான் ஆரம்பித்துள்ள புதிய பயணத்தில் உலக நாடுகளின் அரசுகள் துணைவர வேண்டுமென்றும் ஆயர்கள் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.