2012-05-14 14:57:44

புதிய மறுமலர்ச்சியில் கத்தோலிக்கர் பங்கெடுக்குமாறு திருத்தந்தை வேண்டுகோள்


மே 14,2012. இக்காலத்திய கலாச்சாரப் புதுப்பித்தலில் கத்தோலிக்கர் முழுமையாகப் பங்கேற்க வேண்டுமென்று வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலியின் டஸ்கன் மாநிலத்தின் Arezzo, La Verna, Sansepolcro நகரங்களுக்கு ஒருநாள் மேய்ப்புப்பணித் திருப்பயணத்தை மேற்கொண்ட போது, Arezzo நகரில் பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளுக்குத் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, சமுதாயத்தில் மக்கள் புளிக்காரமாகவும் கிறிஸ்தவர்களாகவும் இருந்து புத்துணர்ச்சியுடனும் ஒத்திணங்கியும் செயல்படுமாறும் கேட்டுக் கொண்டார்.
உலகில் நற்செய்தியையும் மீட்பையும் அறிவிப்பதற்காக அகிலத் திருஅவையும் அனுப்பப்படுகின்றது, ஆயினும் இது எப்பொழுதும் கடவுளின் திட்டத்தாலே நடக்கின்றது, அவர் நம்மைப் பல்வேறு பணிகளுக்கு அழைக்கிறார், அதனால் நாம் ஒவ்வொருவரும் பொது நலனுக்காக அவரவர் பங்கை ஆற்றுகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
கவிஞர் Petrarch, ஓவியரும் கட்டிடக் கலைஞருமான Varasi போன்ற மாபெரும் மறுமலர்ச்சியாளர்கள் பிறந்த பகுதி இது, இவர்கள் கிறிஸ்தவ விழுமியங்களிலிருந்து உரம் பெற்று மனிதன் குறித்த கருத்தியலை உறுதிப்படுத்துவதில் உயிர்த்துடிப்புள்ள அங்கம் வகித்தார்கள், இவர்களது செயல்கள், ஐரோப்பிய வரலாற்றில் தடம் பதித்துள்ளன என்று மேலும் அவர் கூறினார்.
இந்த முன்னோர்களின் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட திருத்தந்தை, மனிதன் குறித்த எத்தகைய கண்ணோட்டத்தைப் புதிய தலைமுறைகளுக்கு நாம் பரிந்துரைக்கின்றோம் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
எல்லா மக்கள் மீதும் கடவுள் காட்டும் அன்பை வாழ்வதற்கு விடுக்கப்படும் அழைப்பு, மனிதர் அனைவரின் மாண்பை மதித்தல், நலிந்தவர் மீது அக்கறையும் தோழமையுணர்வும் காட்டுதல் உட்பட புதிய கிறிஸ்தவக் கலாச்சாரத்தைக் காணச் செய்கிறது என்று கூறினார் திருத்தந்தை.
இது, குறிப்பாக மனித வாழ்வை அதன் தொடக்க முதல் இயற்கையான மரணம் அடையும்வரை பாதுகாப்பதிலும், நீதியும், நலிந்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் சட்டங்கள் மூலம் குடும்பங்களைப் பாதுகாப்பதிலும் வெளிப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.
இத்தாலியிலும் பிற பகுதிகளிலும் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு கிறிஸ்தவர்கள் அசிசி நகர் தூய பிரான்சிசின் சுடர்விடும் சான்று வாழ்க்கையை வழிகாட்டியாகக் கொள்ளுமாறு பரிந்துரைத்தார் திருத்தந்தை.
இத்திருப்பலியில் இத்தாலியப் பிரதமர் மாரியோ மோந்தியும் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
1224ம் ஆண்டில் அசிசி நகர் தூய பிரான்சிஸ் ஐந்து காய வரம் பெற்ற ஆலயம் அமைந்திருக்கின்ற La Verna வுக்கு, மோசமான காலநிலையால் திருத்தந்தை இஞ்ஞாயிறன்று செல்லவில்லை. ஆயினும் Sansepolcro நகருக்குச் சென்றார். இயேசுவின் திருமுகம் என அறியப்படும் புகழ்பெற்ற திருச்சிலுவை இங்கு உள்ளது.








All the contents on this site are copyrighted ©.