2012-05-14 15:00:20

ஒலிம்பிக் தீப பயணத்தின்போது செபங்களையும் எடுத்துச் செல்லும் ஒரு முயற்சி


மே,14,2012. மேமாதம் 19ம் தேதி, வருகிற சனிக்கிழமைத் துவங்கி, 70 நாட்கள் இங்கிலாந்தின் பல நகரங்கள் வழியே இலண்டன் நகருக்கு எடுத்துச் செல்லப்பட உள்ள ஒலிம்பிக் தீப பயணத்தின்போது செபங்களையும் எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியில் More Than Gold, அதாவது, 'தங்கத்தையும் விட கூடுதலாக' என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளது.
More Than Gold என்பது கத்தோலிக்கத் திருஅவை, இங்கிலாந்து திருச்சபை, உட்பட இங்கிலாந்திலும் வேல்சிலும் உள்ள பல கிறிஸ்தவ சபைகள் இணைந்து உருவாகியுள்ள ஓர் அமைப்பாகும்.
ஒலிம்பிக் தீபம் பயணம் செய்யும் வழியே பல ஆயிரம் கிறிஸ்தவ சபைகள் உள்ளன. அச்சபைகளில் வாழும் அனைவரும் இத்தருணத்தைப் பயன்படுத்தி தனியாகவும், குழுக்களாகவும் செபங்களை எழுப்புவதற்கு இது அரியதொரு வாய்ப்பு என்று More Than Goldன் அமைப்பாளர்களில் ஒருவரான Jane Holloway கூறினார்.
ஒலிம்பிக் தீபம் பயணம் செய்யும் அதே வேளையில் செபங்களும் பயணம் செய்கின்றன என்பதன் அடையாளமாய் தொடர் ஓட்டங்களில் பயன்படுத்தப்படும் ஒரு கோல் பல்வேறு சபைகளால் தொடர்ந்து அனுப்பப்படும் என்று ICN கத்தோலிக்க செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது.
70 நாட்கள் நடைபெற உள்ள இந்த செப முயற்சியில் Truro, Durham, Newcastle, Whitby ஆகிய பகுதிகளின் ஆயர்களும் கலந்துகொள்ள இசைவு தெரிவித்திருப்பதாக இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.